Home செய்திகள் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய 36 பேர் குழு அமைத்த திமுக!

தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய 36 பேர் குழு அமைத்த திமுக!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான கள ஆய்வு செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 36 பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்தக் குழுவினர் தொகுதி வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்துத் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.

குறிப்பாக வாக்குச் சாவடி வாரியாகக் கிடைத்த வாக்குகள், தேர்தல் பணிகளில் இருந்த தொய்வு மற்றும் கள நிலவரம் குறித்த தகவல்களைச் சேகரித்து, வரும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் தங்களது அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று, உள்ளூர் நிர்வாகிகளிடம் தனித்தனியாகக் கருத்துகளைக் கேட்டுப் பெற உள்ளனர்.

தேர்தல் பின்னடைவிலிருந்து மீண்டு வரவும், கட்சியைப் பலப்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கை மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் இந்த ஆய்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version