இதே ஜனவரி 12ம் நாள். 1967 – எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அன்று மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது எம். ஜி. ஆருக்கும் எம். ஆர் . ராதாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி ராதா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் எம். ஜி. ஆரை சுட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவரது இடது காதருகே சுடப்பட்டார். துப்பாக்கி குண்டு அவரது தொண்டையில் பாய்ந்தது. இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும். எம் ஆர். ராதா மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் ராதாவுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் அது மூன்றரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுச்சு.
இதுக்கிடையிலே ” என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?” என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சர்யத்தோடு கேட்டாராம் எம்.ஜி.ஆர். அது குறிச்சு ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். ‘அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை’ அப்படீன்னு விளக்கினார்.
அந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுச்சு. அதாவது தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்’ எனப் பேச வேண்டும். ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்’ என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, ‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே… வெளிய போய் மேடை போட்டு பேசு’ என சண்டை போட்டிருக்கிறார். இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா. இதுதவிர, காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும் ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. வழக்கு விசாரணையில், எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.
‘எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்’ என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில், ‘எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா’ என வாக்குமூலம் கொடுத்தார். ‘எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்’ என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.
