நீட் தேர்வில் தோல்வியடைந்தும் மனம் தளராத மங்களூரு இன்ஜினியரிங் மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது .
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ரிதுபர்ணா (வயது 20). இவர் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங் படித்து வருகிறார் இந்த நிலையில் அந்த மாணவிக்கு இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் அமெரிக்காவில் உள்ள கிளை நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார்.
இது குறித்து மாணவி ரிதுபர்ணா கூறுகையில்,” எனது தொழில் பயிற்சியை முடித்த பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலை வாய்ப்புக்கான கடிதம் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் நான்தான் இளையவர். நான் எம்பிபிஎஸ் படிக்க விரும்பினேன். அதற்கான நீட் தேர்வு தேர்ச்சி பெற முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு எனது பெற்றோரின் விருப்பப்படி இன்ஜினியரிங் படித்தேன். எனது தந்தை தான் இன்ஜினியரிங் படித்து அரசு வேலையில் சேர வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படி மங்களூரு அடியாரில் உள்ள சாக்யாத்ரி இன்ஜினியரிங் கல்லூரியில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் படித்தேன். அப்போது நான் எனது சீனியர்களுடன் பழகி இந்த துறையில் எனது திறமையை வளர்த்துக் கொண்டேன்.
எனது தோழியுடன் சேர்ந்து பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் மற்றும் அறுவடை செய்து பிரிக்கக்கூடிய ரோபோவை உருவாக்கினேன். சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த போட்டியாளர்கள் இடையே கோவாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் எனது ரோபோவை காட்சிப்படுத்தி வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை பெற்றேன்.
எனக்கு தொடக்கத்தில் ஆண்டுக்கு ரூ.39.58 லட்சம் ஆக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. நான் செய்த தொழில் பயிற்சியை பார்த்து என்னை வேலைக்காக அங்கீகரித்த பிறகு ஆண்டு சம்பளம் ரூ.72 லட்சம் 20 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டது. இன்றைய இளைஞர்கள் பெரிய கனவுகளை கொண்டுள்ளனர். ஆனால் வெற்றி பெற 200 சதவீதம் உழைப்பை கொடுப்பதற்கு பதிலாக 50 சதவீதம் மட்டுமே கொடுக்கின்றனர். முழு உழைப்பை கொடுத்தால் எதிலும் சாதிக்கலாம். வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் தாய் நாட்டை ஒருபோதும் மறக்கக்கூடாது” இவ்வாறு அவர் கூறினார்..
கல்லூரியில் ஏழாவது செமஸ்டர் தேர்வு முடிந்ததும் வேலைக்காக அமெரிக்க செல்ல உள்ளார் ரிதுபர்ணா. இதற்கிடையே மாணவியை அழைத்து கர்நாடக சட்டசபை சபாநாயகர் யு.டி காதர் பாராட்டி மைசூர் தலைப்பாகை அணிவித்து கௌரவித்தார்.
