திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே பரப்பாடி சாலையில், இன்று காலை எரிந்த நிலையில் கிடந்த கார் ஒன்றிற்குள் நான்கு பேரின் கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களில் இரண்டு குழந்தைகள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கார் தீப்பற்றி எரிவதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்க அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

