தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, இந்திய தேசிய காங்கிரஸ் தனது முழு ஆதரவைத் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஏஐசிசி தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், தவெக தலைவர் விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று, மக்களின் ஆணையை மதிக்கும் வகையில் இந்த ஆதரவு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆதரவானது இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளைத் தவெக கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டது என அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
காமராஜர் காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் நோக்கிலும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கை வழிப்பயணத்திலும் இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்றும், இந்தத் கூட்டணி வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர மரியாதை மற்றும் அதிகாரப் பங்கீட்டின் அடிப்படையில் அமையவுள்ள இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல திரு. விஜய் மற்றும் திரு. ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து உறுதிபூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
