Home உலகம் கேஎஃப்சி, மேகி மீது FSSAI அதிரடி நோட்டீஸ்!

கேஎஃப்சி, மேகி மீது FSSAI அதிரடி நோட்டீஸ்!

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), சமூக ஊடகங்களில் பொதுமக்கள் தரப்பில் வைக்கப்பட்ட அடுக்கடுக்கான புகார்களைக் கையில் எடுத்து, நாட்டின் முன்னணி உணவு மற்றும் மின்-வணிக நிறுவனங்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் ஏலூருவில் உள்ள எம்.வி.ஆர் மாலில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி (KFC) கிளை மிகவும் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த உணவு வணிக நிறுவனத்திற்கு (FBO) எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது; மேலும், அங்குள்ள சுகாதாரம், தூய்மை, உணவு கையாளுதல், சேமிப்பு, கழிவு மேலாண்மை, பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் ஊழியர்களின் தனிப்பட்ட சுகாதாரம் தொடர்பான அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து, அதற்கான விரிவான நடவடிக்கை எடுத்த அறிக்கை (ATR) மற்றும் ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இவற்றுடன், பிளிப்கார்ட் இந்தியா (Flipkart India) மற்றும் ஓபன் சீக்ரெட் (Open Secret) நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்ட பேரீச்சம்பழப் பாக்கெட்டில் பூச்சிகள் இருந்ததாக வந்த புகாரின் பேரிலும், நெஸ்லே (Nestlé) நிறுவனத்தின் மேகி (Maggi) நூடுல்ஸ் பாக்கெட்டிற்குள் புழுக்கள் மற்றும் பூச்சிகள் கண்டறியப்பட்டதாக எழுந்த புகாரின் பேரிலும் அந்தந்த நிறுவனங்களுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நுகர்வோரின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவு விநியோக விவகாரங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என்னென்ன திருத்த மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Exit mobile version