குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த “நெக்ஸா எவர்கிரீன் பிரைவேட் லிமிடெட்” என்ற தனியார் நிறுவனம் கவர்ச்சிகரமான நில விற்பனை திட்டத்தை அறிவித்தது. பிரதமர் மோடி தூதராக உள்ள நகரமய திட்டம் என்று போலியாக கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்ட அவர்கள், தங்களிடம் முதலீடு செய்தால், நிலம், வரவாரம் வருமானம் மற்றும் கவர்ச்சி பரிசுகள் என்று கூறி முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ளனர்.
இதனை நம்பி நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கூட்டம் நடத்தி பேசியுள்ள நிலையில், பிரதமரின் வீடியோக்களை காட்டி திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர். அவர்கள் கூறியபடி குறுகிய காலத்துக்குள் நிலங்கள், மூன்று சதவீதம் வார வாரம் வருமானம் கொடுத்துள்ளனர். மேலும் செல் ஃபோன்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற பரிசுப் பொருட்களை வழங்கி அனைவரையும் சந்தோஷப்படுத்தி உள்ளனர்.

இதை நம்பி மேலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். சிறிது காலத்திற்கு பின்பு அந்த நிறுவனம் அதிகாரிகள் தலைமறைவாகியுள்ளனர். வாடிக்கையாளர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்ட செயலியும் முடங்கிப் போனது. இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவானது. இந்த முதலீட்டு திட்டத்தில் ரூ.2,700 கோடி வரை மோசடி நடந்ததாக தெரியவந்துள்ளது. அந்த குஜராத் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக கிஷோர் டெல்லியில் வசிப்பது தெரியவந்தது. அவரை டெல்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.