Home Uncategorized குணா குகைக்கு போக ஆசைப்படும் இளசுகள்!

குணா குகைக்கு போக ஆசைப்படும் இளசுகள்!

மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் நடிகர் கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் குணா படம் குறித்தும், படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்ட குகை குறித்தும் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் அதன் தொழில்நுட்ப அம்சங்கள், நடிப்பு, திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்காக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருது..

குறிப்பா இக்கதை நடக்கும் குணா குகைக்கு போகும் ஆசை நிறைய பேருக்கு வந்து குணா குகை பற்றிய தேடலில் இறங்குவோர் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகுது..

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது.

2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குணா குகை, கூட்டம் கூட்டமாக பயணிகளை ஈர்க்கும் மர்மமான மற்றும் அதிசயிக்கத்தக்க பகுதியாக இருந்தது.

எல்லோருக்கும் குணா குகையாக தான் தெரியும் ஆனால் அந்த குகையின் முந்தைய பெயர் ‘டெவில்ஸ் கிச்சன்’ அதாவது,’பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இந்தப் பகுதி ஆழமான குகை என்பதால் இதற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுது.

1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான திரு.பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தைக் கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது. இந்து புராணங்களின்படி, பாண்டவர்கள் குகைகளில் தங்கி உணவு சமைத்துள்ளனர் என்ற குறிப்பும் உள்ளது.

அவ்வளவாக பிரபலமடையாமல் இருந்த இந்த குகை, கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு தான் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

அதற்கு முக்கிய காரணம், 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா என்ற படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ என்ற பாடல் இந்த குகையில் தான் படமாக்கப்பட்டது.

ரம்யமான இரவு சூழலில் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது. குணா படத்தின் மூலம் பிரபலமானதால் ‘குணா’ என்ற பெயரே அந்த குகைக்கு பொருத்தமாகிவிட்டது. இதற்கு பின்பு இந்த குகையை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

அந்த குணா குகையை சுற்றி பார்க்கும் ஆர்வத்தில் ஆபத்தை உணராமல் குகை பள்ளத்தில் தவறி விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர்.

வனத்துறையினரின் ஆலோசனையை ஏற்க மறுத்து குகைக்குள் சென்ற பலர் உயிரிழந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு குணா குகை மூடப்பட்டது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று வனத்துறையால் மரப்பாலம் அமைக்கப்பட்டது.

அதன் மூலம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குகையின் முகப்பு வரை சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பு வசதிகளுடன் குணா குகையை கண்டு ரசித்து வந்தனர்.

நாளடைவில் இந்த மரப்பாலமும் சிதிலமடைந்து விட்டதால் குணா குகைக்கு அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குகையை துரத்தில் இருந்த பார்த்துச் செல்லும் நிலைதான் உள்ளது.

Exit mobile version