இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு காய்கறிகளுக்கும் தனித்தன்மை உண்டு. இருந்தாலும், பல பேர் ஒதுக்கி வைக்கும் காய்கறிகளில் பாகற்காயும் ஒன்று. காரணம் அதன் கசப்பு தன்மை. குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பதற்கே பெரிய வேலையாக இருக்கும் இந்த சூழ்நிலையில், பாகற்காயை எப்படி சாப்பிட வைப்பது. பாகற்காய் கண்டாலே பிடிக்காத குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெரும்பாலானோர் பாகற்காயை வாங்குவதே நிறுத்தி விடுகின்றனர். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்காக இன்று ஒரு சூப்பர் ரெசிபி தயாராக இருக்கிறது. பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடும் அளவிற்கு இந்த தொக்கு அல்டிமேட்டாக இருக்கும். வாருங்கள் பாகற்காய் தொக்கு செய்யலாம். முதலில் அதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – ½ டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – ½ டீ ஸ்பூன்
- சீரகம் – ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் – ½ சிட்டிகை
- கருவேப்பிலை – 1 கொத்து
- பாகற்காய் – ½ கிலோ
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 2
- மஞ்சள் தூள் – ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- புளி – பெரிய எலுமிச்சை அளவு
- வெல்லம் – 50 கிராம்
- அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்
- கசகசா – ½ டீ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அரிசி மற்றும் கசகசா சேர்த்து வறுக்கவும்.
- அதனுடன் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- பின் பாகற்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பின் வெங்காயத்தை கழுவி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- புளியின் மேற்பகுதியை தண்ணீரில் கழுவி விட்டு சிறிது நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
- பின் புளியை கரைத்து ஓடு அல்லது குப்பை இல்லாதபடி எடுத்து கொள்ளவும்.
- குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் சீரகம், மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின் அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் படி வறுத்து கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதில் நறுக்கி வைத்த பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும்.
- வெங்காயம், தக்காளி, மற்றும் பாகற்காய் நன்றாக வெந்து குழைந்து வந்ததும் புளி கரைசலை சேர்க்கவும்.
- காய் நன்றாக வெந்ததும், வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும்.
- குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, அரைத்து வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் 3 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்துவிடவும்.
- நன்கு திரண்டு தொக்கு பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைத்து இறக்கினால் பாகற்காய் தொக்கு தயார்.
