Home Uncategorized காலை டிபன் என்ன செய்றதுன்னு குழப்பமா இருக்கா? அப்போ இப்படி ஒரு நாள் ட்ரை பண்ணுங்க!

காலை டிபன் என்ன செய்றதுன்னு குழப்பமா இருக்கா? அப்போ இப்படி ஒரு நாள் ட்ரை பண்ணுங்க!

பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து தான் நாம் சாப்பிடுவோம். ஆனால் அதை அடை செய்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மரவள்ளிக்கிழங்கு பருப்பு அடை வழக்கமாக சாப்பிடும் அடையை விட ருசியாக இருக்கும். மேலும் இந்த அடை சத்தானதும் கூட. இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

மரவள்ளிக்கிழங்கு – மீடியம் சைஸ் 

புழுங்கல் அரிசி – 1 கப்

கடலைப்பருப்பு – 1/4 கப் 

துவரம் பருப்பு – 1/4 கப் 

வரமிளகாய் – 10 

சீரகம் – 1 டீஸ்பூன் 

பூண்டு – 4-5 பல் 

உப்பு –  தேவையான அளவு

வெங்காயம் – 1  நறுக்கியது 

கறிவேப்பிலை – 1 

கொத்தமல்லி – சிறிது

 எண்ணெய் – தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை எடுத்து, நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மரவள்ளிக்கிழங்கை எடுத்து, அதன் தோலை சீவிவிட்டு, பின் அதை சிறு துண்டுகளாக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, அரைத்துக் கொள்ள வேண்டும்.

2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து, அத்துடன் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய், சீரகம், பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.  பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து விட வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி, அடை போன்று ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான, சத்தான மரவள்ளிக்கிழங்கு அடை தயார். 

Exit mobile version