10 படங்களை தாண்டுவதற்கே பல இசையமைப்பாளர்கள் சிரமப்படுகிற காலத்தில் ஒரே நேரத்தில் 10ற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. 60களில் 80களில் ஒரு இசையமைப்பாளர் வருடத்திற்கு 10, 20 படங்களுக்கு இசையமைப்பதற்கும் இப்போது இசையமைப்பதற்கும் ஏகப்பட்ட சவால்கள் இருக்கின்றன. அச்சவால்களை சமாளித்து தன்னை தானே செதுக்கிக் கொண்டிருப்பவன் யுவன்.
அன்னகிளி படத்தின் மூலம் இளையராஜாவின் இசை தமிழகத்தின் எல்லா மூலைகளுக்கும் போய் சேர்ந்ததைப் போல, ரோஜாவின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் எனும் புதிய ஒலி கலவையை தமிழகம் கண்டு கொண்டது போல, அரவிந்தன் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு அமைந்துவிடவில்லை. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் பின்னணியிசையும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தாலும் படம் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை இரண்டு வருடங்கள் அவருக்கு படம் இல்லை, அதையடுத்து அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் வெற்றி பெற்றாலும் படங்கள் தோல்வியையே தழுவின. அந்த காலகட்டத்தில் ராசியில்லாத இசையமைப்பாளர் என்ற பெயர் தனக்கு இருந்ததாகவும், வீட்டில் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு அழுது இருப்பதாகவும் கூறும் யுவன் ஷங்கர் ராஜா, இன்று தன் இசையின் மூலம் எல்லோரின் மன சாளரங்களையும் திறந்து பலரின் இதயத்தின் அரசனாகியிருக்கிறார்.
