இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்ஷேவின் சகோதரரும் அந்நாட்டு நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷே அவசரமாக டெல்லி வந்து காத்திருந்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (டிசம்பர் 1) மாலை சந்தித்திருக்கிறார்.
நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு பசில் ராஜபக்ஷே மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இலங்கையின் கருவூலச் செயலர் எஸ்.ஆர். ஆட்டிகல, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் பல அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது இருந்திருக்கிறார்கள்.
கொழும்பு துறைமுக முனையத்தை மேம்பாடு செய்வதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுடன் செய்துகொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை ஒருதலைபட்சமாக ரத்து செய்தது. சீனாவின் அழுத்தமே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இந்த ஒப்பந்த முறிவால் இலங்கைக்கும் பெரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது.
இதற்கிடையே நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ரசாயன உரங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக இயற்கை விவசாயத்துக்கு திரும்ப முடியாமல் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. காய்கறிகள், பால் விலை மிகக் கடுமையாக உயர்ந்துகொண்டே இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பால் , சமையல் எரிவாயு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது இந்த நெருக்கடியான நிலையில்தான் இந்தியாவிடம் உதவி கேட்டு டெல்லிக்கு வந்திருக்கிறார் பசில் ராஜபக்ஷே. இந்தியாவின் நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வகையில் உதவிகளைக் கேட்டிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் 1.1 பில்லியன் டாலர் நாணய பரிமாற்றத்திற்காக குறைந்தபட்சம் ஒரு கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்துள்ளதாகவும், இலங்கையின் கோரிக்கையை ஏற்குமா என்பதை டெல்லி இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையை தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் வாய்ப்பாக நடுவண் அரசு பயன்படுத்துமா அல்லது நாம் தரவில்லையென்றால் சீனா தந்து வளைத்துக் கொள்வான் என்று முந்தைய சோனியா அரசு கூறிய நொண்டிச் சாக்கை கூறி இலங்கை சிங்கள ஆதிக்கத்தின் வலையில் வீழப்போகிறதா என்பதே இப்போது எழுகின்ற கேள்வி. தமிழர்கள் என்று பார்க்காவிட்டாலும் அங்குள்ள ஈழத்தமிழர்கள் ஹிந்துக்கள் என்பதை நினைத்தாவது நடுவண் அரசு செயல்பட வேண்டும்.
இலங்கையிடம் ஏமாந்தது போதும் என கருதி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத் தலைவர்கள் இந்த விடயத்தில் முற்றிலும் மவுனம் சாதிப்பார்கள் என்பது திண்ணம். காரணம் நடுவண் அரசை ஏதேதோ காரணங்களை கூறி எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, தங்கள் சுயநல பாதுகாப்பிற்காக முக்கியமான தமிழ் லட்சியங்களை விட்டுக் கொடுப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.
