மகாளய பட்சம் புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள்,
பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையை மகாளயம், மஹாளயம், மாவுளி அமாவாசை எனக்கூறுவர்.
புரட்டாசி மாத அமாவாசையே மஹாளயபட்ச அமாவாசையாகும். அதாவது சூரிய- சந்திர கிரகங்களின் சங்கமத்தில் தோன்றுகின்ற சோமாதித்ய (சோம + ஆதித்ய) யதி மண்டலத்தின் தோற்றமாகும்.
அமாவாசைகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது இந்த மகாளயம் தான்.மா என்றால் மிகப்பெரியது என்று பொருள் அதனால் தான் நம் முன்னோர்கள் மகாளயம் என்றார்கள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன் போல பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
எனவேதான்….பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மஹாலயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் என்று பொருள். நமது முன்னோர்கள் பூமியில் 16 நாட்கள் தங்கி தனது சந்த திகளுக்கு நன்மை செய்ய ஆசிர்வதிக்கும் காலம் இது.
இக்காலத்தில் எமதர்மன் மறைந்த நமது முன்னோர்களை அவர்கிளின் பெற்றோருடன் பூமிக்கு செல்ல அனுமதியளித்து அக்காலத்தில் பூமியில் உள்ள மகன்கள், மகள்கள் அளிக்கும் தர்பணம், தானம் மூலமான உபசாரங்களை எற்க கட்டளையிடுகிறார்.
இக்காலத்தில் உணவளிக்கமாட்டார்களா என மறைந்த மூதாதையர் ஏங்குவார்கள். அவர்களின் ஆத்மாசாந்திக்காக அன்னதானம் செய்வது மிக அவசியமானது மாளயத்தில் அன்னரூபமான சிரார்தம் மிகவும் சிறப்பானது. அதை செய்ய இயலாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.
தான பலன்!
மஹாளய பட்சம் புண்ணிய தினங்களில் ஏழைகளுக்கும், ஆசார அனுஷ்டானங்களில் சிறந்த பெரியோர்களுக்கும் வஸ்திர தானம், அன்னதானம், கன்றுடன் கூடிய பசு தானம், தீப தானம் ஆகியவற்றை அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும்.மாளைய பட்சம் அன்ன தானம் செய்ய மிகவும் உகந்த காலம் ஆகும்
மாளைய பட்சத்தில் தினமும் காலையில் பசுமாட்டிற்கு 2 கிலோ தவிடு, வெல்லம், உறுவிய அகத்திகீரை ஆகியவற்றை கலந்து ஊறவைத்து காலையில் தானம் செய்யவும். பிறகு யானைக்கு தானம் செய்யவும்,இதன் பிறகு ஏழைகளுக்குத் தானம் செய்யவும்,
மாளய பட்சத்தில் ஏதேனும் ஒருநாளில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.
வேதம் கற்பிக்கும் வேதபாட சாலைகளுக்கு மாளைய பட்சத்தில் உதவிசெய்வது மகா புண்ணியமாகும்
மாளயத்தில் தர்பணம் செய்துவைக்கும் பிராமணருக்கு தரும் பணம் சம்பளம் (சம்பாவனை) ஆகும் அது தானம் அல்ல!
அவரின் கடமைக்கு தரும் பணத்தை தானம் என்று தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்.எனவே தானத்தை தனியாக சரியான வழியில் செய்யவேண்டும்.
ஸ்நானம்!
இந்த மஹாளய அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகள், சேது, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது, காசி, கயை, குருக்ஷேத்திரம், சூர்ய குண்டம், பிரம்ம சரஸ் ஆகிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா போன்ற மகா புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து, பித்ருக்களுக்காக அவரவரது சக்திக்கேற்ப தானம் கொடுப்பது அளவற்ற புண்ணிய பலனைத் தரும்.
சிராத்த பலன்!
மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தம், மற்றும் பித்ரு பூஜைகள் ஆகியவற்றின் புண்ணிய பலன் நமக்குப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும். தர்ம தேவதைக்கு தீப தானம் அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும். மஹாளய பட்சத்தில் சிராத்தம் செய்து, பித்ருக்களை பூஜிக்கும் புண்ணிய பலன் எத்தகைய கொடிய கிரக தோஷங்களானாலும், ஒரு நொடியில் போக்கி விடும்.

