கல்விக்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச இலக்கை எட்டத் தவறியுள்ளதாக யுனெஸ்கோவின் (UNESCO) சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காக ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தபட்சம் 4 சதவீதமும், அல்லது அரசின் மொத்த பொதுச் செலவினத்தில் (Public Expenditure) 15 சதவீதமும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது யுனெஸ்கோவின் சர்வதேசக் குறைந்தபட்சத் தரநிலையாகும்.
இந்தியாவில் கல்விக்கான ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதமாகப் பராமரிக்கப்பட்டாலும், அரசின் மொத்த செலவினத்தில் கல்விக்கான பங்கு 14.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2015-ல் 15.7 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது யுனெஸ்கோவின் 15 சதவீத இலக்கிற்குக் கீழே சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.
நிதி ஒதுக்கீட்டில் நிலவும் இந்தச் பின்னடைவு, நாட்டில் இடைநிலைக் கல்வி முழுமையடைவதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடுநிலைப்பள்ளிக் கல்வியை (Classes VI-VIII) நிறைவு செய்வதில் இந்தியா 86 சதவீதத்தை எட்டியிருந்தாலும் (இலக்கு 99%), மேல்நிலைக் கல்வியில் (Classes IX-XII) 51 சதவீத நிலையை மட்டுமே எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
