Friday, June 12, 2026
Homeஉலகம் மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களை வீழ்த்தும் 'ஜாய்னிக்'!

 மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களை வீழ்த்தும் ‘ஜாய்னிக்’!

உலகையே அச்சுறுத்தி வரும், எந்தவொரு சக்திவாய்ந்த மருந்துக்கும் கட்டுப்படாத ‘சூப்பர்பக்ஸ்’ (Superbugs) எனப்படும் அதிவீரிய பாக்டீரியாக்களை வேரறுக்க, இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட ‘ஜாய்னிக்’ (Zaynich) என்ற புதிய ஆன்டிபயாடிக் மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ‘வொக்ஹார்ட்’ (Wockhardt) நிறுவனம் சுமார் 14 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிக்குப் பின் முழுமையாக உள்நாட்டிலேயே கண்டுபிடித்து, தயாரித்து, சந்தைப்படுத்தியுள்ள இந்த மருந்து, மருத்துவமனைகளில் பரவக்கூடிய மிகக் கடுமையான தொற்று நோய்களுக்கு எதிரான மருத்துவப் பரிசோதனைகளில் 97 சதவீத அசாத்திய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் மட்டும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத இத்தகைய ‘ஆன்டிபயாடிக் எதிர்ப்புத் திறன்’ (Drug-resistance) கொண்ட பாக்டீரியா தொற்றுகளால் ஆண்டுக்குச் சுமார் 3 லட்சம் பேர் நேரடியாக உயிரிழக்கும் வேளையில், தகுந்த மருத்துவ விழிப்புணர்வு இல்லாவிட்டால் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் இந்த மரணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 லட்சமாக உயர்ந்து, அது புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களை விடப் பெரிய உயிர்க்கொல்லியாக மாறிவிடும் என்று ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழின் தரவுகள் எச்சரிக்கின்றன.

இத்தகைய அபாயகரமான சூழலில், தீவிர நிமோனியா மற்றும் சிறுநீரகத் தொற்றுகளை உருவாக்கும் இ-கோலி (E. coli), கிளெப்சியெல்லா (Klebsiella) மற்றும் சூடோமோனாஸ் (Pseudomonas) போன்ற கொடிய பாக்டீரியாக்களின் எதிர்ப்பு நொதிகளைச் செயலிழக்கச் செய்து, நோயாளிகளைக் காப்பாற்றும் ஒரு பிரம்மாண்டமான ஆயுதமாக இந்த ‘ஜாய்னிக்’ மருந்து பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த அதிநவீன மருந்தின் ஆயுளும் விலையும் மக்களின் கைகளில்தான் உள்ளது என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், சாதாரண சளி, இருமல் அல்லது காய்ச்சலுக்குக் கூட மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் சுய மருத்துவம் மூலமாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தேவையின்றித் தவறாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், இந்த மாபெரும் புதிய மருந்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் நாம் நாமே அழித்து விடுகிறோம் என்பதால், ஆன்டிபயாடிக் பயன்பாட்டில் அதீதக் கட்டுப்பாடும் விழிப்புணர்வும் தேவை என்று வலியுறுத்துகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments