Home உலகம் சர்வதேச ஒலிம்பிக் தினம்: விளையாட்டின் மூலம் உலகை இணைக்கும் விழா!

சர்வதேச ஒலிம்பிக் தினம்: விளையாட்டின் மூலம் உலகை இணைக்கும் விழா!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 ஆம் தேதி உலகெங்கும் ‘சர்வதேச ஒலிம்பிக் தினம்’ (International Olympic Day) மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1894 ஆம் ஆண்டு இதே நாளில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தோற்றுவிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில், 1948 ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளைச் சிறப்பிப்பதற்காக நவீன ஒலிம்பிக்கின் தந்தையான பியரி டெ கூபர்டின் (Pierre De Coubertin) என்பவரால் வடிவமைக்கப்பட்ட, ஐந்து வெவ்வேறு நிறங்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே விளையாட்டு மூலமாக உன்னதமான நட்புறவையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதையே குறிக்கிறது.

போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, அதில் பங்கேற்பவர்கள் தங்களின் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ஒலிம்பிக்கின் முக்கிய லட்சியமாகப் பார்க்கப்படும் நிலையில், இந்த 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக் தினம், உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) இணைந்து “நகர்வோம் – நீங்கள் இதைச் செய்ய முடியும்!” (“Let’s Move” – “You Can Do This!”) என்ற உத்வேகம் அளிக்கும் கருப்பொருளின் (Theme) கீழ் உலகளாவிய இயக்கமாக முன்னெடுக்கப்படுகிறது.

இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் நோக்கி முதல் அடி எடுத்து வைக்க ஊக்குவிக்கும் இந்தத் தீம், ஒரு புதிய விளையாட்டை முதல் முறை விளையாடும்போது ஏற்படும் அசௌகரியம், தவறுகள் மற்றும் தயக்கங்களைத் தாண்டி விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டுவதுடன், ‘Move’ (உடற்பயிற்சி), ‘Learn’ (ஒலிம்பிக் மதிப்புகளைக் கற்றல்), ‘Discover’ (புதிய விளையாட்டுகளைக் கண்டறிதல்) ஆகிய மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் ஆரோக்கியமான பாதையில் வழிநடத்துகிறது.

Exit mobile version