இது ஒரு சர்க்கரைக் கதை
மு.பழனிவாசன்
(பொறுப்பு துறப்பு)
(இந்த கட்டுரையானது ஒரு நோயினைப்பற்றியது மட்டுமே. இதில் மனிதகுலத்திற்கோ, உலகின் வேறெந்த ஜீவராசிகளுக்கோ எந்தவிதமான மருந்துகளையும் பரிந்துரைக்கப்படவில்லை என்றும், வேறெந்த விஷயத்திற்கும் “கம்பெனி” பொறுப்பேற்காது என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஹா..ஹா…)
————————————————————–
செய்தி வாசிப்புத் தேடலின்போது ஒரு பழைய நூலின் ஒரு பகுதியைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அது சர்க்கரை வியாதி எனப்படும் “நீரிழிவு நோய்” சம்பந்தமானது. அதைக்கண்டதும் மனதில் குறுகுறுப்பு அதிகாயிற்று. இருக்காதா பின்னே? இன்றைக்கு நடைபயிற்சி போவோர், உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துக்கொள்ள நேரும்போது அவர்களுக்குள் நடக்கும் முக்கிய உரையாடல் என்ன தெரியுமா? “சுகர் செக் பண்ணீங்களா? டாக்டர் என்ன சொன்னாரு? எனக்கு சாப்பாட்டுக்கு முன்னால 225. பின்னால 375” என்று பள்ளி, கல்லூரிகளில் வாங்கிய மதிப்பெண்களைக் குறிப்பிடுவதுபோல் பேசிக்கொள்வது சகஜமாகிவிட்டது. அந்த அளவிற்கு அதன் தாக்கம் நீக்கமற எங்கும் நிறைந்துவிட்டது என்பதே உண்மை.
இந்நோய் பற்றி இன்று ”யூ ட்யூப் டாக்டர்கள்” எண்ணற்ற காரணங்களை அடுக்குகிறார்கள். நம் சாப்பாட்டுமுறை சரியில்லை. நீங்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும். சில உணவுப்பண்டங்களை கண்ணால் பார்ப்பதே தீங்கு விளவிக்கும் என்று சொல்லும் அளவிற்கு போய்விட்டனர்.
சர்க்கரை நோய் எதனால் வருகிறது? இதன் வரலாறுதான் என்ன? என்பதை படித்துப்பார்த்தபோது ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் கிடைத்தன.
எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய சுவடிகளில் நீரிழிவுநோய் பற்றிய குறிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கின்றனர்.
நம் பாரத தேசத்தின் வாரணாசியில் இன்றையிலிருந்து தோராயமாக 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ”சுஸ்ருதா” என்பவர். இவரின் அரிய படைப்பு ‘சுஸ்ருதா சம்ஹிதம்’ என அறியபடுகின்றது. இவரே அறுவை சிகிச்சை அளித்தவர்களில் முன்னோடி. விலங்குகளுக்குத் தேவையான வைத்திய முறைகளையும் வகுத்தவர் இவரே. இந்த சுஸ்ருதா என்பவரே இன்று மனித குலத்திற்கு சவாலாக விளங்கும் “நீரிழிவு நோயைப்பற்றி” குறிப்பிட்டிருக்கிறாராம். சுஸ்ருதா இந்நோய்க்கு “பிரமேகம், மதுமேகம்” என்றெல்லாம் பெயரிட்டிருக்கிறார்கள். இவருடைய காலஹ்திற்குப்பின்னால் அதாவது கி.மு. 400 களில் காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த மருத்துவமேதை “சரகர்” என்பவரும் இந்நோய்க்கான பெயர்களை இவரைப் பின்பற்றியிருக்கிறாராம்.
அக்காலத்தைய கிரேக்க நாட்டில் உத்தேசமாக கி.மு. 460- 377 ஆண்டுகாலகட்டத்தில், வாழ்ந்தவர் ”ஹிப்போகிரட்டீஸ்” என்கிற மருத்துவ மேதை வாழ்ந்திருக்கிறார். அவருடை பல்வேறு மாணவர்களில் ஒருவர் ”அரிடாயஸ்” என்பவர். இவர்தான் சர்க்கரை நோய்க்கு ”டயபட்டிக்” என்று பெயரிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்காட்லாந்து நாட்டில் 1950-இல் பிறந்து தன் 75 ஆவது வயதுவரை வாழ்ந்த, தொழில்முறையில் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீர்ர் ”டேனி மெக்கிரைன் (Danny McGrain)” ,
1944 –இல் அமெரிக்க நாட்டில் பிறந்து, பிரபலமான பாப் பாடகியாக விளங்கி, தனது 77 வயது வரை வாழ்ந்த ”மேரி வில்ஸன்” என பலநூறு முக்கிய பிரமுகர்கள் நீரிழிவு நோயினால் ”முக்கி” இருந்திருக்கின்றனர். ஆனால், தங்கள் நோயிடம் அவர்கள் தோற்கவில்லை. அதனால் வாழ்வினை வெற்றியுடன் கடந்திருக்கிறார்கள்.
1922 –இல் டொரோண்ட்டோ பல்கலைக்கழகத்தில், ஃப்ரெட்ரிக் பேண்டிங் (Frederick Banting) and சார்லஸ் பெஸ்ட் (Charles Best) ஆகியோர் “இன்சுலின்” மருந்தினைக் கண்டுபிடித்தபிறகு, அதனை நீரிழிவு நோய்க்கான கடிவாளமாக இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.
மு.பழனிவாசன்
