இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அடையாளம் காணப்பட்டு, இயக்குநர் ஸ்ரீதரால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் 12.10.2021 செவ்வாய்க்கிழமையன்று வயது முதிர்ச்சி காரணமாக காலமானார்.
ஈரோடு பக்கம் பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீகாந்த். இவரின் இயற்பெயர் வெங்கட்ராமன். அழகும் துடிப்புமிக்க இளைஞரான இவர், அரசுப்பணியில் நல்ல பொறுப்பில் வேலையில் இருந்தார். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாடகங்களின் பக்கம் இவரின் கவனம் செல்ல, அங்கே அறிமுகமானார் இயக்குநர் கே.பாலசந்தர்.
திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஸ்ரீகாந்தின் அறையில் இருந்தபடி பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஏராளம். அதேபோல், கவிஞர் வாலியுடனும் நாகேஷுடனும் நல்ல நட்பில் இருந்தார். எல்லோரும் ‘வாடாபோடா’ நண்பர்களாகத் திகழ்ந்தார்கள்.
