காரடையான் நோன்பு நோற்கும் முறையும், சொல்ல வேண்டிய ஸ்லோகமும்…. மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர்.
இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு.
சாவித்ரி விரதம் என்றும் கூறுவர். காரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும்? இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள்.
காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.
இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும்.
முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள். மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம்.
தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும்.
அப்போது “உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்’ என்று வேண்டிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும்.
“மாசி சரடு பாசி படியும்’ என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்….?
அத்துனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம். சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும்
அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.
ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.
இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான்.
இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்…? சங்கல்ப ஸ்லோகம்…. மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே *தியானம்..* ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம் காமாக்ஷீம் ஆவாஹயாமி.
ஸந்த்ராபீடாம் ஸதுரவதநாம் ஸஞ்ஜலாபாங்க லீலாம் குந்தஸ்மேராம் குஸபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம் மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம் காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீ முபாஸே ( சந்திரனை சிரசில் ஆபரணமாக தரித்தவளும் அழகிய திருமுகத்தை உடையவளும் சஞ்சலமான கடாட்ச லீலையை உடையவளும் குந்தபுஷ்பம் போல் அழகை உடையவளும் ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும் முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கரு வண்டுகளை உடையவளும் மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும் கவிகளின் வாக்கிற்கு கல்பவல்லியாக இருப்பவளும் ஆன காமாட்சி தேவியை உபாஸிக்கிறேன் ) நோன்புச்சரடு மந்திரம்… தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம்.
காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்’
