Home Uncategorized கவலைகளைப் போக்கும் கந்த சஷ்டி

கவலைகளைப் போக்கும் கந்த சஷ்டி

ஷண்” என்றால் ஆறு. இதனால்தான் ஆறுமுகங்கள் கொண்ட தமிழ்க் கடவுளான கந்தன் எனும் பெயருடைய முருக கடவுளை ”ஷண்முகன்” என்கிறோம். ஷஷ்டி என்றால் ஆறாவது திதி.

இந்த நாளானது முருகபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஐப்பசி அமாவாசையன்று வரும் தீபாவளிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் சஷ்டி விரதம் தொடங்கி, ஆறாவது நாளான “சஷ்டி”திதி முடியும் நேரம் வரை நீடிக்கும். கந்தனின் அருள்பெற இந்த ஆறுநாட்களும் மேற்கொள்ளும் விரதம் என்பதால் ”கந்த சஷ்டி விரதம்” என்று பெயர்.

சஷ்டி விரதத்தினை அனுஷ்டிக்க மேற்கொள்ள வேண்டியவை: 

சஷ்டி விரதத்தினை முருக பெருமான் கோவில்களில் தங்கி மேற்கொள்வது நல்லது. அத்தகைய சூழலோ வாய்ப்போ அமையப்பெறாதவர்கள் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே கடைபிடிக்கலாம். முதலில் தாங்கள் குடியிருக்கும் இல்லத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

தீபமேற்றும் விளக்கினை நன்கு துலக்கி அதனை மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் கலந்த நீரினை வீடு முழுமையும் ஆங்காங்கு தெளித்தல் வேண்டும்.

விரத நாட்களில் தினந்தோறும் அதிகாலை 4.30 மணிமுதல் 6 மணிக்குள்ளான “பிரம்ம முகூர்த்த நேரத்தில்” எழுந்து நீராடி விட்டு, விளக்கேற்றி வைத்து, முருகபெருமானுக்கு தங்களாலான வகையில் எளிய நைவேத்யம், மற்றும் மனத்தூய்மையுடன் பூஜை செய்ய வேண்டும்.

இதேபோல் மாலையிலும் விளக்கேற்றி பூஜிக்க வேண்டும். அருகாமையில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

விரதநாட்களில், முருகனை மனதில் எண்ணியபடி, வீட்டிலோ அல்லது கோயில்களிலேயோ கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் திருப்புகழ், கந்தர் அலங்காரம், போன்ற கவச நூல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை பொதுவாக திட உணவு எடுத்துக்கொள்ளாமலேயே ஆறு நாட்களும் கடைபிடிக்கலாம். இவ்வாறு செய்ய இயலாதவர்கள் சஷ்டி திதியன்று மட்டுமாவது பால், பழம் மட்டும் உட்கொண்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.

உடல்நிலை கோளாறு மற்றும் உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள் காலையில் மட்டும் எளிய சிற்றுண்டி எடுத்துக்கொள்ளலாம்.

விரதத்தின் முடிவில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் கண்டு, பின் பச்சரி சாதம் சமைத்து, முருகனை வணங்கிச் சாப்பிடலாம்.

மேற்கூறியவாறு திடமான நம்பிக்கையுடன் கந்தபெருமானை எண்ணி, விரதத்தினை மேற்கொள்வதால் கிட்டும் நன்மைகள் அளப்பரியன.

அவற்றில் மிகவும் ஆச்சரியப்படத்தக்கது என்னவெனில், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கவலையில் வாடும் பெண்கள் (ஆண்களும் கூட) இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் கரு உருவாகி குழந்தை பேறு கிட்டுகிறது என்பது பலரின் அனுபவப்பூர்வமான உண்மை.

இதை மேற்கோள் காட்டவே, “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறப்படுகிறது.

அதாவது மண்சட்டியில் ஏதாவது இருந்தால்தான் அகப்பையில் (கொட்டாங்குச்சியாலான கரண்டி) என்று மேலோட்டமாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில்”சஷ்டி”யில் இருந்தால் ”அகப்பை”யில் (உள்ளே இருக்கும் கருப்பையில்) கரு உண்டாகும் என்று பொருளாகும். சஷ்டி விரதமிருந்து சகலமும் பெற்று உய்வோம்!

”கந்தனுக்கு அரோகரா”

Exit mobile version