கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை திருவிழா கொண்டாடப்படவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில். இக்கோயிலில் ஆண்டுதோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கூடி திருவிழா நடத்துவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வரும் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழா ஆரம்பித்து, 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19ம்தேதி நடைபெறும். ஏப்ரல் 20ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து திருநங்கைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த சித்திரை பெருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
