உலகளவில் தற்போதைய சூழலில் சுமார் 850 மில்லியன் மக்கள், அதாவது இரண்டு பேரில் ஒருவர் தீராத சிறுநீரகக் கோளாறினால் (Chronic Kidney Disease – CKD) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் மனிதர்களின் அகால மரணத்திற்கு வழிவகுக்கும் முதன்மையான 5 காரணிகளில் ஒன்றாக இது மாறக்கூடும் என்றும் மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
சிறுநீரக நோய் தீவிரமடையும் போது, அது இதயக் கோளாறுகள் மற்றும் மரண அபாயத்தை அதிவேகமாக அதிகரிப்பதால், ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. இந்நிலையில், ‘தி லான்செட்’ (The Lancet) உள்ளிட்ட உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, ‘ஃபைனரினோன்’ (Finerenone) என்ற மருந்து சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதுகாப்பதோடு, மரண அபாயத்தையும் பெருமளவு குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை சர்க்கரை நோய் (Type 2 Diabetes) உள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு வந்த இந்த மருந்து, தற்போது சர்க்கரை நோய் இல்லாத சாதாரண சிறுநீரக நோயாளிகளுக்கும், நோயின் தீவிரத்தை 23% வரை குறைத்து பெரும் பலன் அளிப்பதாக 24 நாடுகளைச் சேர்ந்த 1,584 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ‘FIND-CKD’ மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் சர்க்கரை நோய் இல்லாதவர்களே என்பதால், தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் இந்த மருந்தின் பயன்பாட்டைப் பரவலாக்குவது, உலகெங்கும் லட்சக்கணக்கான மனிதர்களைச் சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து காப்பாற்றி, அகால மரணங்களைத் தடுக்க உதவும் என்று மருத்துவப் பேராசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

