ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும் மார்ச் 19, 2026 அன்று நடைபெறவுள்ள ‘தெலுங்கு வருடப் பிறப்பு’ (யுகாதி ஆஸ்தானம்) பண்டிகையை முன்னிட்டு, பாரம்பரியக் கோவில் சுத்திகரிப்பு சடங்கான ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ இன்று (மார்ச் 17, 2026) கோலாகலமாக நடைபெற்றது.
வருடத்திற்கு நான்கு முறை (யுகாதி, ஆனி வார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி) நடைபெறும் இந்தச் சடங்கின் போது, கருவறையில் உள்ள மூலவர் சிலைக்கு நீர்ப்புகாத் திரை இடப்பட்டு, மற்ற சிலைகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் அப்புறப்படுத்தப்படும்.
இன்று காலை 6 மணி முதல் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பணியில், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் கலந்த ‘பரிமளம்’ எனும் கலவை கோவில் சுவர்கள், மேற்கூரை மற்றும் தூண்களில் பூசப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்தத் தூய்மைப் பணியையொட்டி இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது; மதியத்திற்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
