Home செய்திகள் தமிழின் பட்டிமன்றக் கலைக்கு மகுடம் சூட்டிய சாலமன் பாப்பையா காலமானார்!

தமிழின் பட்டிமன்றக் கலைக்கு மகுடம் சூட்டிய சாலமன் பாப்பையா காலமானார்!

தமிழின் பண்பாட்டு அடையாளமாகவும், பட்டிமன்றக் கலையை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்த்து மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவருமான தமிழறிஞர் சாலமன் பாப்பையா, மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சாத்தங்குடியில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது எளிய மற்றும் நகைச்சுவையான பேச்சுத் திறமையால் பட்டிமன்றங்களை வெகுஜன மக்களின் கலை வடிவமாக மாற்றியவர். சன் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் மூலமாக பட்டிமன்றங்களை உலகெங்கும் கொண்டு சேர்த்ததோடு, திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களின் சிறப்புகளை எளிமையான முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இலக்கியத் தொண்டிற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ (2021), தமிழக அரசின் கலைமாமணி (2000) மற்றும் முத்தமிழ் பேரறிஞர் (2010) உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்

இன்னும் விரிவாகச் சொல்வதானால் பட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா! அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..” ‘எந்திருச்சு வாங்கே… இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கும் சொந்தக்காரர். போன தலைமுறையில், பட்டிமன்றம் என்றால் கல்லூரி மாணவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கலாம். ஆனால், இன்றைய தலைமுறையில் இதைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர் பாப்பையா என்றால் அதில் மிகை இல்லை. தீபாவளி, பொங்கல் சமயங்களில் டி.வி. முன் அமர்ந்த பெரியவர்களுக்கு, பட்டிமன்றத் தமிழால் தன்னை அடையாளம் காட்டியது ஒரு பக்கம். ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் மூலம் ஜனரஞ்சக உலகத்துக்கு ‘டினோசர்’ தெரிந்ததைப் போல, ‘சிவாஜி’ படத்தின் மூலம், ‘அங்கவை_சங்கவை’ சங்கதியை அவர் தெரிவித்து, சிறு குழந்தைகளுக்கும் தன்னை அடையாளம் காட்டியது ஒருபக்கம். ஆக, மதுரை மண்ணில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து, இன்று ஒரு தமிழ் அறிஞராக, பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாக, நடிகராக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுரை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

Exit mobile version