”கலாச்சாரத்தின் தோல்வி”
மு.பழனிவாசன்
தன் மகளை ஒருவன் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண்ணின் அம்மா புகார் தருகிறார். போக்சோ வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரிக்கிறது. நீதிமன்றத்தில் விசாரணை. கடத்தியதாக கூறப்பட்ட நபருக்கு ”ஆயுள் தண்டனை” விதிக்கப்பட்டு அந்த நபர் சிறைக்குச் செல்கிறார். அடுத்து தன் முயற்சியால் மேல்முறையீடு செய்கிறார். விசாரணை நடைபெறுகிறது.

அதில் தெரியவந்த விவரங்கள்:
”கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தேதியிலேயே சம்பந்தப்பட்ட பெண் 20 வயதை எட்டியிருந்தார்.
அந்த தேதி, அந்த நேரத்தில் அந்த நபருடன் பொது போக்குவரத்தில் பயணித்துதான் அந்த நபருடன் சென்றிருக்கிறார். (முதலில் கோரக்பூர் வரை பஸ்ஸிலும், அதன்பின் அங்கிருந்து பெங்களூரு வரை ரயிலிலும் பயணம் நிகழ்ந்திருக்கிறது) அதுமட்டுமல்ல…கொஞ்சம் கூட எதிர்ப்பு காட்டவோ, தப்பிச் செல்லவோ அந்த பெண் முயற்சிக்கக்கூட இல்லை.
அதேநாள் முதல் ஆறுமாத காலம் அந்த நபருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே “ஒன்றாக கூடிக்குலவி வாழ்ந்திருக்கிறார்”.
ஆறுமாத காலத்திற்குப்பின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபருடன் தன் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார்.”
மேற்படி உண்மைகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட அந்த நபரின் மேல் முறையீட்டில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதனால், நீதிமன்றம் அந்த நபருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து விட்டது.
இந்த வழக்கில் இரு நீதிபதிகளின் அமர்வுதான் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பினை வாசித்தபோது, அவர்கள் கூறிய கருத்துதான் இப்போது ஹைலைட்டான விஷயம்!
நீதிபதிகளின் கருத்து:
“லிவ் – இன்” எனப்படும் மேற்கத்திய வாழ்க்கைமுறை மீதான ஈர்ப்பு காரணமாகவே, திருமணம் செய்யாமல், ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் மனநிலை அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட உறவுகள் கசக்கும்போதுதான் பாலியல் பலாத்காரம் செய்துவிட்ட்தாக ஆண்கள் மீது பொய்ப்புகார்கள் தரப்படுகின்றன. தற்போதுள்ள சட்டங்களும் பெண்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன.” – இதுதான் அவர்கள் கூறிய கருத்தின் சாரம்சம்.
”போக்சோ, பி.சி.ஆர் போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன” என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவையெல்லாம் ஏற்கனவே தெரிந்தவைதான். ஆனால், “லிவ்-இன்” என்கிற கலாச்சாரம் குறித்து நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் சிந்திக்கத்தக்கவை. அந்த கலாச்சாரம் மேற்கத்தி நாடுகளில் சகஜமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வாத விஷயம்.
ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்வின் புதுப்பயணத்தை மனதால், உடலால் இணைந்து பயணிக்கத் தொடங்கும் ஆரம்பப்புள்ளி. இதற்கான தொடக்கவிழாதான் “திருமணம்”. இது அவரவர் மதத்தின் வழக்கப்படி, சாதியின்படி, குடும்பப் பாரம்பரியப்படி நிகழ்கிறது. இப்போதெல்லாம் மதங்களைக் கடந்து, சாதிகளைக்கடந்து, குடும்பப் பாரம்பரியங்களைக் கடந்து திருமணங்கள் நடந்தேறுகின்றன. இவையெல்லாம் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டது. ஆனால்,”திருமணம்” என்பதே “உடலால் புணர்தல் மட்டுமே” என்றாகி விட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்த “லிவ்-இன்”கலாச்சாரத்தின் ஆதிக்கம். இத்தகைய நிலைப்பாடு ஆடு, மாடு போன்ற விலங்குகள் உள்ளிட்ட அனைத்து வகை ஜீவராசிகளுக்கும் மட்டுமே உரியது என்பதே என் கருத்து.
”லிவ்- இன்” கலாச்சாரம் சென்னை போன்ற பெருமாநகரங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. இதன் மூலம் குற்றவியலுக்குட்பட்ட சம்பவங்கள் பல்கிப்பெருகி விட்டன. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பரஸ்பரம் நம்பகத்தன்மை “பட்டுப்போன மரம்” போலாகி விட்டது.
ஆணும், பெண்ணும் உடலால் புணர்வது மட்டுமா மானிட வாழ்க்கை?
”புணர்தல்” மட்டும்தான் என்றால், கழிவறைக்குச் சென்று வருவது போன்றது மட்டும் தானா காதலும், காமமும்?
எல்லாவற்றையும் கடந்ததுதான் “லிவ்-இன்” என்றால், அதனால் தான் பாதிக்கப் பட்டுவிட்டதாக அலறித்துடித்து ஒரு தேசத்தின் இறையாண்மை மிகுந்த சட்டத்தின் துணையை ஏன் நாட வேண்டும்? குதிரை தப்பித்து ஓடியபின் கொட்டிலை அடைத்து என்ன பயன்? வேண்டுமானால் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு வேண்டுமானால் வருமானத்தைத் தரக்கூடும். அதைத்தவிர சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன பயன்? தேவையற்ற மன உளைச்சலும், அவதூறும்தானே மிஞ்சும்?
”லிவ்-இன்” என்பது பொறுப்புகளற்ற மன ஒப்பந்தம் என்பதே. தற்போது இதில் பெரும்பாலும் குடும்பக்கலாச்சாரத்தில் நல்லொழுக்கத்துடன் மிளிரும் குடும்பத்திலிருந்து வரும் ஆண்களும் பெண்களுமே ஈடுபடுகிறார்கள். அதில் 99% தோல்வியுற்று அடுத்து எந்தப்பக்கம் மேற்கொண்டு பயணிப்பது? என்கிற குழப்பத்திற்கு வந்துவிடுகிறார்கள். அதற்குள் தாய், தந்தையர், உடன்பிறந்தோர் பலரையும் இழந்து தனிமரமாகி விடுகின்றனர். சொத்து இருக்கும் குடும்பத்தில் அவர்கள் தரவில்லை என்றால் அதற்கும் ஒரு வழக்கு. சரி.. அப்படி சொத்துக்களைப் பெற்று யாருக்காக? எதற்காக வாழப்போகிறார்கள்? இந்த உறவு முறையால் ஒருவேளை குழந்தை பிறந்துவிட்டபின் ”லிவ்- இன்”உறவு கசந்து விட்டால், அதைப்பெற்றவர்கள் பிரிந்துவிட்டால், அந்தக்குழந்தையின் நிலை என்ன? அதன் மனவளர்ச்சி எப்படி இருக்கும்? தொடர்ந்து வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளும்? ஏதோ ஒரு வகையில் “சிங்கிள் பேரண்ட்” முறையில்தான் வாழவேண்டும். இதற்குத்தானா இந்த “லிவ்-இன்” புரட்சியும் புண்ணாக்கும்?
”கள்ளக்காதல்” கூத்திலும் இதே பிரச்சினைகள் உண்டு. ஏதோ ஒருவகையில் தற்கொலை, கொலை என நிகழ்ந்தால், அதனால் இரு தரப்பிலும் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகள்தான் என்பது வேதனைக்குரிய ஒன்று. அவர்களின் எதிர்காலச்சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கும்?
ஆக, நாம் உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் எதுவென்றால், திருமணம் என்பது இரு தனிமனிதர்களுக்கிடையில் மட்டுமானதல்ல. அது கலாச்சாரம் என்கிற நரம்புகளால் கோர்க்கப்பட்ட முத்துமணி மாலையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு நன் மதிப்பு கிட்டும்.
எந்த மதமோ, எந்த சாதியாகவோ இருந்துவிட்டுப் போங்கள். பெற்றோர் முடிவு செய்யும் திருமணமோ, அல்லது காதலித்து பெற்றோர் ஒப்புக்கொள்ளப்பட்ட திருமணமாகவோ, யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் செய்யும் திருமணமோ, இப்படி எதுவாயினும் முறைப்படியான, ஆதாரப்பூர்வமான, அங்கீகாரம் பெறப்பட்ட திருமணமாக இருக்கட்டும் என்பதே என் வேண்டுகோள்.
மேற்படி ”எவ்வகைக்கும் நான் கட்டுப்பட மாட்டேன். நான் புரட்சியவாதி” என்று கூறுபவர் என்றால், பரவாயில்லை போகட்டும். இன்னொரு அப்பாவி ஆணையோ, அல்லது இன்னொரு பெண்ணையோ ஏமாற்றிவிடாதீர்கள். அதற்கான எவ்வித உரிமையுமில்லை. அதேபோல் தயவுசெய்து குழந்தை பெற்றுக்கொள்ளாமல் எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போங்கள். அதற்கும் முன் ”என் வாழ்க்கை அலங்கோலமானது எப்படி?” என்பதை டிஜிட்டல் மயமாக்கிவிட்டுச் செல்லுங்கள்.
”கலாச்சாரத்தின் தோல்வி நம் தேசத்தின் தோல்வி” என்பதை இனியாவது உணருங்கள்.
மு.பழனிவாசன்
ALSO READ :