உலக அளவில் பெரும்பாலானோரால் விரும்பப்படுகிற சிலரில் மைக்கேல் ஜாக்சனும் ஒருவர். ‘பாப் இசை மன்னர்’ என பட்டித் தொட்டி எல்லாம் பாராட்டை பெற்ற ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்…!
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில், ஜோசப் வால்டர் – கேத்ரின் தம்பதியின் மகனாக 1958, ஆகஸ்ட் 29ல் பிறந்தவர் மைக்கேல் ஜாக்சன். 3 சகோதரிகள், 5 சகோதரர்கள் (ஒரு சகோதரர் பிறந்ததும் இறந்து விட்டார்) என ‘மினி கிராமம்’ போல ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர்.
சிறு வயதில் தந்தையின் வளர்ப்புச்சூழல் பிடிக்காமல் குடும்பத்தில் ஒரு பிடிப்பு இல்லாமலே வாழ்ந்தவர் ஜாக்சன். ஒல்லியான தேகம் கொண்ட இவருக்கு பாப் இசை மீது மோகம் ஏற்பட்டது. பாடுவது, ஆடுவது என வீட்டிலேயே தனது கச்சேரியை துவங்கிவிட்டார். இவருக்கு சகோதரர்களும் ஒத்துழைப்பு வழங்க தொடங்கினர். விளைவு… 5 சகோதரர்களுடன் இணைந்து 1969ல் ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி நடத்த தொடங்கினர்.
11 வயதில் துவங்கிய இவரது இசைப்பயணத்திற்கு திரும்பிய இடமெல்லாம் பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்…சுகம்’ என உலகமெங்கும் ஜாக்சனை தூக்கி கொண்டாட துவங்கி விட்டனர். ஜாக்சனால் சகோதரர்களுடனும் ஒத்துப்போக முடியவில்லை. தனது 13வது வயதில் தனியாக ஆடிப்பாடி ஆல்பங்கள், கச்சேரிகள் என கலக்கினார்.
தொடர்ந்து வெளியான ‘காட் டு தி தேர், திரில்லர், பேட், டேஞ்சரஸ், ஹிஸ்டரி என வரிசையாக ஆல்பங்கள் வெளியாகி ரசிகர்கள் கால் மண்ணில் படாதவாறு பார்த்துக் கொண்டார். இவரது திரில்லர் ஆல்பம் அப்போதே 4.50 கோடி இசைத்தட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
பாப் இசையை தனது இனிமையான குரலில் பாடி, உடலை ரப்பர் போல வளைத்து, காலை தூக்கி, இழுத்தவாறு ஆடும் இவரது ஸ்டைல் ரசிகர்களை மயங்க வைத்தது. வீட்டில் ஒரு இளைஞன் ஆடத் துவங்கினால் அது கட்டாயம் மைக் கேல் ஜாக்சனின் பாடலுக்காகத் தான் இருக்கும். இவரின் ‘திரில்லர்’, ‘மூன் வாக்கர்’ போன்ற ஆல்பங்களை பார்த்து தான், எனக்கு நடனத்தின் மீது ஆர்வமே வந்தது என ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என பாராட்டப்பட்ட பிரபு தேவாவே கூறியிருக்கிறார்.
பாப் இசை உலகில் சக்கரவர்த்தியாக வலம் வந்த இவர், தனது கருத்த தேகத்தை வெண்மையாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆம்… உடல் முழுவதும் பிளாஸ் டிக்சர்ஜரி செய்து கொண்டார்.
பல முறை தொடர்ந்த இந்த முயற்சி ஜாக்சனுக்கு பெரும் வினையாக அமைந்தது. உடல் வலிமை இழந்தது. ஒரு புறம் சிகிச்சை, மறுபுறம் இசை என மாறி மாறி இவரது வாழ்க்கை சிக்கலை சந்தித்தது. பிரஸ்லி, டொபாரே என 2 மனைவிகளுமே இவரிடம் விவாகரத்து பெற்று விட்டனர்.
இளம் வயது வளர்ப்புச்சூழல், மனைவிகள் பிரிந்தது என சொந்த வாழ்க்கை இவருக்கு எமனாக விளைந்தன. போதைப் பழக்கம், சிறுவர்களுடன் தகாத உறவு என பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். கைது, வழக்கு, உடல் நிைல பாதிப்பு என வரிசையாக மைக்கேல் ஜாக்சனை போட்டு தாக்க, அதிகளவு கச்சேரிகளை நடத்தி மீண்டுவர எண்ணினார்.
இவரின் இசைப்பயணத் திட்டத்தில் இந்தியாவும் இணைந்திருந்தது. ஆனால், 2009, ஜூன் 25ம் தேதி இவ்வுலகில் இருந்து பாப் இசை மன்னர் விடைபெற்றார். இன்று எத்தனையோ பேர் பாப் இசையில் வலம் வந்தாலும், இவரின் இடம் மட்டும் வெற்றிடமாகவே உள்ளது. பாப் இசை இருக்கும் வரை ஜாக்சனும் இருப்பார்..
