Saturday, June 13, 2026
Homeசெய்திகள்மதுரை பெயரே இல்லை! முதல்வர் விஜயின் கோரிக்கை மனு தென் தமிழகத்தில் அதிருப்தி!

மதுரை பெயரே இல்லை! முதல்வர் விஜயின் கோரிக்கை மனு தென் தமிழகத்தில் அதிருப்தி!

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, மாநிலத்தின் கோரிக்கைகள் அடங்கிய நான்கு பக்கக் குறிப்பாணையைச் சமர்ப்பித்த போது, அதில் ‘மதுரை’ என்ற வார்த்தை ஒருமுறை கூட இடம் பெறாதது தென் தமிழக மக்களிடையேயும், தொழில் அமைப்புகளிடையேயும் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இந்த முக்கியக் கோரிக்கை மனுவில், தென் தமிழகத்தின் மையப்புள்ளியாக விளங்கும் மதுரை மாவட்டத்தின் நீண்டகாலத் திட்டங்களான மதுரை விமான நிலைய விரிவாக்கம், எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்துதல், புதிய தொழில்துறை வழித்தடம் (Industrial corridor) மற்றும் சுணங்கிக் கிடக்கும் மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்கள் குறித்து எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.

மேலும், சுமார் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட 31 கிலோமீட்டர் நீள மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல் குறித்தோ, முடங்கிப்போன நைப்பர் (NIPER) போன்ற மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் முன்மொழிவுகளைப் புதுப்பிப்பது குறித்தோ எந்தக் குறிப்பும் அதில் இடம்பெறவில்லை.

திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்கள் வான்வழி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வரும் வேளையில், புதிய அரசு தங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என நம்பியிருந்த மதுரை மாவட்டத் தொழில் கூட்டமைப்பினர் (MADITSSIA) மற்றும் வர்த்தக சபையினர், இந்த அலட்சியப் போக்கால் ஒட்டுமொத்த தென் தமிழகமும் மீண்டும் ஒருமுறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கடுமையான வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments