இந்துக்களால் சிவனுக்குரிய விரதமாக கொண்டாடப்படும் மகா சிவராத்திரி இந்த மகா சிவராத்திரிக் குறித்து ஏராளமான கதைகள் உள்ளன.
மகா சிவராத்திரி அன்று ஒருவர் சிவனை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம் மற்றும் ஆசை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று போற்றப்படும். மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. ஏழு கிழமைக்கும் ஏழு சிவாலயங்கள் என்று கொண்டால் அருள்மிகு கபாலீஸ்வரர், வள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாதீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மகா புண்ணிய தலங்கள் உள்ளன.
இந்த ஏழு சிவாலயங்களுக்கும் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நான்கு காலமும் ருத்ரம், சமகம் என வேத பாராயணத்துடன் நடைபெறும்.
முதல் ஜாமம் இரவு சுமார் 11.30 மணிக்குத் தொடங்கும். இக்கால பூஜை சிவப்பு சாத்துதல் என அழைக்கப்படுகிறது. மூலவர் அபிஷேகத்திற்குப் பிறகு, சிவனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும்.
சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நான்கு கால பூஜைகளில், தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கால பூஜை மஞ்சள் சாத்துதல் எனப்படும். இதில் அபிஷேகத்திற்குப் பிறகு லிங்க ரூபமான கபாலீஸ்வரர் மஞ்சள் வஸ்திரத்தாலும், மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்படுவார்.
மூன்றாம் ஜாமம் பச்சை சாத்துதல். பச்சை நிற வஸ்திரம், வில்வம், தாழம்பூ ஆகியவை சாற்றப்படும். நான்காம் காலம் மீண்டும் சிவப்பு சாத்துதல்.
சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்பு மலர்களால் அலங்கரிப்பர். நான்காம் கால பூஜை, மறுநாள் விடியற்காலை நான்கரை மணியளவில் நிறைவுறும். அனைத்துக் கால பூஜைகளிலும் வில்வம் சாற்றுவது விசேஷம்.
