Home Uncategorized மதுரை சித்திரை தேர்த் திருவிழா

மதுரை சித்திரை தேர்த் திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று (ஏப்ரல் 22) கோலாகலமாக தொடங்கியது.

இதற்காக அம்மனும், சுவாமியும் அதிகாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள ம.முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும், பிறகு ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியிலும் எழுந்தருளினர்.

சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், மீனாட்சியம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள, அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணிக்குள் தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 6.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது.

கீழமாசி வீதி தேரடியில் துவங்கிய இந்த தேரோட்டம் தொடர்ந்து தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வழியாக வலம் வந்து, இன்று நண்பகல் நிலையை அடையும். தேர் வலம் வரும் நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

இதன் காரணமாக நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சித்தரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று மதுரை மூன்றுமாவடி அருகே அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Exit mobile version