எல்லா துறைகளிலும், ஒவ்வொருவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவர் நிச்சயம் இருப்பார். ஆனால், கர்நாடக இசைத்துறையில் பெண்கள் மத்தியில் அதீத தாக்கத்தினை ஏற்படுத்தியவர் ஒருவர் உண்டென்றால் அவர்
மதுரை சண்முகவடிவு சுப்புலஷ்மி என்கிற எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.
தன் தாயையே முதன்மை குருவாவாக கொண்டவர், பின்னாளில் பல அரிய இசைக்கலைஞர்களிடமும் இசை பயின்று தன் திறனை வளர்த்துக் கொண்டவர் எம்.எஸ்.சுப்புலஷ்மி. பன்மொழிகள் அறிந்தவர். பாசம் மிகுந்த பண்பு மிகுந்தவர் என்றே அறியப்படுகிறார். அவரின் சாதனைகளை அடுத்த தலைமுறையினர் இன்னும் எட்டவேயில்லை என்பது மட்டும் உண்மை.
திரைப்படத்துறையில் இவர் வெற்றிகள் ஈட்டிய கதாநாயகி என்பது வரலாற்று உண்மை. திரைப்படங்களில் இன்றைய காலத்தில் பெண் வேடமிடுவதை ஆண்கள் பலரும் சாதனையாக பிரபலப்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு பெண் ஆணின் தோற்றத்தில் அதுவும் “நாரதர்” (1941 ஆம் ஆண்டு) கதாப்பாத்திரத்தில் முழு படத்திலும் நடித்த சாதனையைச் செய்தவர் எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்கள்.
ஐ.நா.சபையில் பாடிய முதல் தமிழ்ப்பெண் என்பது இன்றளவும் பாததத்திற்கு, தமிழகத்திற்கு, குறிப்பாக அவர் பிறந்த மதுரை மண்ணுக்கு கிட்டிய பெருமை.
மூதறிஞர் இராஜாஜி எழுதிய ”குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா….” என்னும் பாடலை பலரும் ரீமிக்ஸ் செய்து பாடிவருகின்றனர். ஆனாலும் அதனை முதன்முதலில் அசலாகப் பாடிய எம்.எஸ்.சுப்பு லஷ்மி அவர்களின் குரலில் கேட்டால்தான் அவர் சங்கீதத்தினை கையாண்ட லாவகத்தன்மையும், அவர் குரலின் மேன்மையும் புரியும்.
பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத் ரத்னா போன்ற விருதுகள் அவரைத் தேடிச் சென்று தங்களை பெருமைப்படுத்திக்கொண்டன என்பதே உண்மை.
ஏழுமலையானுக்கான “வெங்கடேச சுப்ரபாதம்” பாடியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியதால் கீழ் திருப்பதியில் அவருக்கு மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை அளிக்கக்கூடியது.
ஒரு சில தமிழக தலைவர்களுக்கு பட்டி தொட்டியெங்கும் சிலை வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில், லெளகீக வாழ்வில் ஆன்மீகத்தில் திளைத்த எம்.எஸ்.சுப்புலஷ்மி போன்ற மேதைகளின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவது அவரின் சங்கீத ரசிகர்களுக்கு மனவலி தரக்கூடியதாகக் கூறுகின்றனர். இது குறித்து இசையுலகமாவது ஏதாவது கைங்கர்யம் செய்ய முயற்சிப்பது நல்லது. ஏனெனில் தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதியை தேசத்தின் சமூகநலத்திற்காக தாரையாக வார்த்தவர் எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்கள்.
2004 ஆம் ஆண்டு தனது 88 ஆவது வயதில் இயற்கையெய்திய எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் கடைசி மேடைக் கச்சேரியானது, சென்னை மியூசிக் அகாடமியில் நடபெற்றது. காரணம், அவரின் வெற்றிக்குப் பின்னால் துணைநின்ற தன் கணவர் சதாசிவம் அவர்கள் அவ்வாண்டுதான் காலமானார். அதன் பிறகு அந்த இசைக்குயில் மேடையேறவேயில்லை.
அவர்தம் பிறந்த நாள் செப்டம்பர் 16. அவர்தம் சாதனைளை வணங்கிப் போற்றுவோம்.
