மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் முகாமிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தபடி ஹவுரா பாலத்தின் அழகை ரசித்துப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்றிரவு (ஏப்ரல் 23) ஹவுராவிலிருந்து கொல்கத்தா வரை நடைபெற்ற பிரம்மாண்ட வாகனப் பேரணியின் (Roadshow) போது ஹவுரா பாலத்தின் மேல் பயணித்ததாகவும், இன்று அதிகாலை அதே பாலத்தை ஹூக்ளி நதியின் நீர்ப்பரப்பில் இருந்து காண்பது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“கங்கை நதி வங்காளத்தின் ஆன்மாவில் ஓடுகிறது” எனக் குறிப்பிட்ட அவர், இந்த அதிகாலைப் பொழுதில் படகு வலிப்பவர்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுடன் உரையாடியதுடன், ஹவுரா பாலம் மற்றும் வித்யாசாகர் சேது ஆகியவற்றைத் தனது கேமராவிலும் படம் பிடித்து மகிழ்ந்தார்.
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் செழுமைக்கும் தனது அரசு எப்போதும் கடமைப்பட்டிருப்பதாக இந்த நிகழ்வின் வாயிலாக அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
