நாற்பது வயதிலே
"40 வயது" இது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியமான பருவம். மருத்துவர்களும், மனித வாழ்க்கையில் 40 வயதை முக்கியமான காலம் என்கிறார்கள்.
திரைப்படங்களின் ‘செகண்டு ஹாஃப்’ போன்றது அவ்வாழ்க்கை. அந்த வாழ்க்கையை ஆரோக்கி யமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள கொஞ்சம் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும்.
40 வயதினர் சில எண்களை கவனிக்கத் தவறக் கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, உடல் எடை ஆகியவற்றுக் கான அளவீட்டு எண்களை மனப்பாடமே செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட அளவைவிட அந்த எண்கள் அதிகரித்தாலோ குறைந்தாலோ தாமாக அலர்ட் ஆகிவிடுவது நல்லது.
40 வயது ஆனதற்கான முதல் அறிகுறியைத் தருவது பார்வைதான். சாப்பாட்டுத் தட்டு கண்ணுக்குத் தெரியும். ஆனால், அதிலுள்ள பூச்சி கண்ணுக்குத் தெரியாது. பார்வைக் குறைபாட்டை கவனிக்கா விட்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். 40-ஐ தொட்டுவிட்டால் நீங்களாகவே பார்வைத் திறனை சோதித்துக் கொள்ளுங்கள். 40 வயதுக்குப் பின் எலும்புகள் பலமிழக்கத் தொடங்கும். அதுவரை மலையைக்கூட சுமந்த எலும்புகள் இலையைச் சுமக்கவே சிரமப்படக்கூடும்.
எனவே, உணவு, உடற்பயிற்சி என எலும்புகளைப் பலப்படுத்தத் தேவையான விஷயங்களை கவனமாகச் செய்ய ஆரம்பியுங்கள். 40 வயதுவரை உங்கள் முன்னோர்கள் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால்கூட பரவாயில்லை.
இனிமேல் அது தேவை. பரம்பரை பரம்பரையாக கைமாறும் சொத்துகளை விட நோய்கள்தான் அதிகம். எனவே முன்னோர்களின் மருத்துவ வரலாற்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களைக் காக்க உதவும்.