இந்திய இரயில்வே அமைச்சகம், பயணிகளின் வசதிக்காகப் புதிய மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தை அறிமுகம் செய்கிறது.
இந்த புதிய இணையதளத்தில், ஒரு நிமிடத்திற்குப் பதியப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 32 ஆயிரத்தில் இருந்து 1.5 லட்சத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிஎன்ஆர் (PNR) மற்றும் இரயில் விபரங்களை அறியும் வசதியும் ஒரு நிமிடத்திற்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சத்திற்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தட்கல் முன்பதிவு நேரங்களில் தடையற்ற வேகமான பக்கப் பதிவிறக்கமும் (Page loading), எளிதான வழிநடத்துதலும் இருக்கும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற சித்திரங்கள் இல்லாமல், மிகத் தெளிவான முகப்புப் பக்கத்துடன், முன்பதிவின் போது தொந்தரவு தரும் கேப்ட்சா (CAPTCHA) குறியீடுகள் மற்றும் பாப்-அப் விளம்பரங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், தங்களுக்குப் பிடித்தமான இருக்கைகளைத் தேர்வு செய்யும் வசதி, கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்க ‘ஃபேர் காலண்டர்’, பன்மொழித் தெரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகளுக்கான ஒருங்கிணைந்த சலுகை வசதிகள் ஒரே தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
வழக்கத்தை விட 10 மடங்கு கூடுதல் நெரிசலைக் கையாளும் திறன் கொண்ட இந்த அதிநவீன மாற்றங்கள் அனைத்தும் ‘ரயில்ஒன்’ (RailOne) செயலியிலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
