Wednesday, July 22, 2026
Homeசெய்திகள்நகராட்சிகளுக்கு முதல்வர் விஜயின் அதிரடி உத்தரவு! இனி அலட்சியத்திற்கு இடமில்லை!

நகராட்சிகளுக்கு முதல்வர் விஜயின் அதிரடி உத்தரவு! இனி அலட்சியத்திற்கு இடமில்லை!

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வெளிப்படையான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி, உள்ளாட்சி அதிகாரிகள் தினமும் காலை 7 மணிக்குள் தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும், பொதுக் கழிப்பறைகள் மற்றும் பேருந்து நிலையங்களைத் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் சேகரிப்புடன் முறையாகப் பராமரிக்க வேண்டும்.

மேலும், பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பை சேகரிக்கும் போது விழிப்புணர்வு பாடல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும், சாலைகளில் உள்ள மணலைத் தினமும் பெருக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்தி நகரங்களைப் போஸ்டர்கள் இல்லாதவாறு மாற்ற வேண்டும், மரக்கன்றுகளை நட்டுப் பசுமையாக்க வேண்டும்.

தெருவிளக்குகள் முறையாக எரிகிறதா என்பதை வாரந்தோறும் ஆய்வு செய்து, பழுதடைந்த விளக்குகளை 24 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். குடிநீர் விநியோகம், சாலைப் பள்ளங்களைச் சீரமைப்பது போன்ற பொதுமக்களின் புகார்களுக்கு முதலிடம் கொடுத்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும், கட்டிட வரைபட அனுமதிகளைத் தாமதமின்றி வெளிப்படைத்தன்மையுடன் வழங்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாக, பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் விநியோகப் பணிகள், சாலைப் பணிகளின் தரத்தை அதிகாரிகள் தினமும் நேரில் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், இதில் எவ்வித தாமதமும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments