Friday, February 6, 2026
HomeUncategorizedமாம்பழத்தில் லாபம் இல்லை- விவசாயிகள் வேதனை!

மாம்பழத்தில் லாபம் இல்லை- விவசாயிகள் வேதனை!

இந்த ஆண்டு மாங்காய் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் ஆசையாய் வளர்த்த மாமரங்களை விவசாயிகள் வெட்டி அழிப்பதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மாம்பழங்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக உற்பத்தி இருப்பதால் நியாயமான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வருத்தப்பட்டு மாமரங்களை அழிக்கும் உச்சகட்ட முடிவுக்கு சென்றுள்ளனர்.

ஆந்திர மாநில விவசாயிகளும் இதே பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மாம்பழங்களை சாலைகளில் கொட்டி அழித்து வருகின்றனர். ஆந்திர அரசு இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.8 என்று விலை நிர்ணயித்து, ரூ.4 மானியமாக வழங்கி விவசாயிகளுக்கு ரூ.12 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் விவசாயிகளின் குரலுக்கு செவி கொடுக்க யாரும் இல்லை.

 

திமுக அரசின் அலட்சியப் போக்கால் விவசாயத்தை விட்டு வெளியேறும் மா விவசாயிகள் – ஆந்திர மாநிலத்தை பின்பற்றி மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டு நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் காலம் காலமாக வளர்த்த மாமரங்களை வெட்டி அழிக்கும் சூழலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி விவசாயிகளும் தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. 

அதே போல, தமிழக மாங்காய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதால் அதிருப்தியடைந்த மா விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு பழச்சாறு தொழிற்சாலைகளை மட்டுமே நம்பி ஏராளமான விவசாயிகள் மா சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்திருக்கும் மாங்காய் உற்பத்தியை காரணம் காட்டி தமிழக மாம்பழங்களை வாங்க மறுத்திருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல், விளைச்சல் பாதிப்பு என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியிலும் மா விவசாயத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மீளவே முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.

மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பதோடு கூடுதலாக 4 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கும் நிலையில், தொடர் போராட்டத்திற்கு பின்பும் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசால் மா மரங்களை வெட்டி அழிக்க வேண்டிய சூழலுக்கும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கும் மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, ஆந்திர மாநில அரசைப் போலவே தமிழகத்திலும் மாம்பழங்களுக்கு மானியத்துடன் கூடிய உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, மா சாகுபடி அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில்  மாம்பழ கூழ் தொழிற்சாலையை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். – டிடிவி. தினகரன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments