Homeசெய்திகள்வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு! 15 மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு! 15 மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடியான எச்சரிக்கையும் விரிவான வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அவசர சிகிச்சை, இதய சிகிச்சை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்டவை எந்தவிதத் தடையுமின்றி 24 மணி நேரமும் முழு அளவில் இயங்குவதை உறுதிசெய்யுமாறும், மின்வெட்டு நேரங்களில் தடையற்ற மின்சாரத்திற்கு ஜெனரேட்டர்களைத் தயார் நிலையில் வைப்பதுடன் குறைந்தது 7 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 108 அவசர கால ஊர்திகளில் போதுமான எரிபொருட்களும் உயிர்காக்கும் மருந்துகளும் எப்போதும் பயன்பாட்டில் இருக்க வேண்டுமென்றும்; பாம்பு மற்றும் நாய்க்கடி விஷமுறிவு மருந்துகள், டெங்கு, காய்ச்சல், வயிற்றுப்போக்குக்கான மருந்துகள் மற்றும் குடிநீரைச் சுத்திகரிக்கக் குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட வெள்ளம் மற்றும் புயல் ஆபத்து அதிகம் உள்ள 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மழைக்கால நோய்களான டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்றவற்றைத் தடுத்துக் கண்காணிக்கத் தனித்தனி கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, களப்பணியாளர்கள் மூலம் தீவிரக் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் தேங்காமல் வடிகால்களைத் தூய்மைப்படுத்தவும், மின்கசிவு விபத்துகளைத் தவிர்க்கவும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளைச் சீராகப் பராமரிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments