பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்கள் ஒரு பத்திரிக்கையாளரிடம், தான் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது பேசிய விவரத்தை ஒரு பத்திரிக்கையில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அதைப்படித்ததும் “அடடே” என்று எண்ணத்தோன்றியது. அவரின் யோசனையானது நானும் ஒரு திரைப்படக்கலைஞன் என்கிற ரீதியில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
அதாவது, சாவித்திரி அவர்கள் கூறியது இதுதான்: இன்று என் போன்ற கலைஞர்கள் நடித்த படங்கள் ”மறுவெளியீடு” செய்யப்படுகின்றன. அவையும் வசூலில் சக்கைபோடுகின்றன.
ஆனால் அப்போது வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு எவ்விதமான உதவிகளும் கிட்டுவதில்லை. நாங்களாக பெருமைபட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
ஆகவே, இதுபோன்று மறுவெளியீட்டு சமயத்தில், அப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், இயக்குனர், கேமராமேன், எடிட்டர் பொன்ற பலருக்கும் 1% , 2% என உதவி செய்தால் பலருக்கும் அது மறுவாழ்வளிக்குமே…” என்று வருத்தப்பட்டதாக அறிந்து என் கண்கள் கசிந்தன.
சாவித்திரி அவர்கள் நடிகை என்பதைக் கடந்து, ஒரு தயாரிப்பாளர், இயக்குனரும் ஆவார். தான் வாழ்ந்து கெட்ட நிலையில் அவருக்குத் தோன்றிய அந்த உயரிய எண்ணத்திற்கான அடிப்பட காரணம் இன்றும் கூட இருந்து வருகிறது.
எம்.ஜி.ஆரின் “அடிமைப்பெண்”, சிவாஜி கணேசனின் “கர்ணன்”, ”வசந்த மாளிகை” என்று பழைய படங்கள் முதல் இன்று விஜய் நடித்த “கில்லி” வரையும் கூட மறுவெளியீட்டு படங்கள் சக்கை போடு போடுகின்றன.
ஆனால், அந்த படங்களில் பணியாற்றிய அனைத்து துறை கலைஞர்களும் பொருளாதார ரீதியில் சுகமாகவா இருக்கிறார்கள்? அல்லது அவர்களின் வாரிசுகள் எல்லோருமே வசதியாகவா வாழகிறார்கள்? சரி… இது நடைமுறைக்கு சாத்தியமா? நிச்சயம் சாத்தியமே… சாவித்திரி அவர்களின் காலத்தில் இன்று உள்ளதுபோன்ற திரைப்படக் கலைஞர்களுக்கு அவர்களின் துறைசார்ந்த சங்கங்கள் இருந்ததில்லை. அப்படியே இருந்திருந்தாலும் ஆக்கப்பூர்வமான புள்ளிவிவரங்கள் தொல்கைநோக்குப் பார்வையுடன் அவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இன்று நிலைமையே வேறு. ஒவ்வொரு துறைசார்ந்த சங்களும் வலுவாக, இணைதயதள வசதியுடன், துல்லியமான புள்ளிவிவரங்களுடன் செவ்வனே பணியாற்றி வருகின்றன. மேலும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பான “பெப்ஸி”யின் நிர்வாகமும் செயல்படுகிறது. ஆகவே கலைஞர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் தரவுகளைக் கண்டறிவது மிக எளிது.
அவர்களில் வசதி படைத்தவர்களாக இருந்து, பெருந்தன்மையாக வேண்டாமென கூறினாலும், அந்த பங்கு சதவீதம் அந்தந்த துறையின் சங்களுக்குச் சென்றாலே அது பலருக்கும் பயன்படக்கூடும்.
தமிழ்த்துறையின் ஆகச் சிறந்த செல்வாக்கு மிகுந்தோர் இதுகுறித்து பரிசீலித்து, ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி தீபம் ஏற்றக்கூடும்.
நடிகை சாவித்திரி அவர்களின் ஏக்கத்துடன் கூடிய நல்லெண்ணம் நிச்சயம் பலருக்கும் மறுமலர்ச்சி தருவதுடன், அவரின் ஆன்மாவும் மகிழ்ச்சியடையும். தமிழ்த்திரையுலகம் கவனத்தில் ஏற்குமா?
