Home Uncategorized பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் – சங்கம் எச்சரித்து தீர்மானம்

பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் – சங்கம் எச்சரித்து தீர்மானம்

பொதுக்குழு கூட்டத்தில், பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை என எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ‛‛பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்.

புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்ல மாட்டோம்; புகார் மீது நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும். பாலியல் தொந்தரவு சினிமா துறையில் மட்டுமல்ல. மீ டூ சர்ச்சையின்போதே விசாகா கமிட்டி அமைத்தோம். நாங்கள் எங்கள் உரிமையை கேட்போம்” என்றார்.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி கூறியதாவது:

பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை, அதற்கென அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது. எங்களுக்கு புகாரளிப்பதற்காக 2019ம் ஆண்டே நடிகர் சங்க விசாகா கமிட்டி உருவாக்கப்பட்டது.

திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்த கமிட்டியில் உள்ளனர்.

தைரியமாக இருங்கள் புகார் கொடுப்பவர்கள் யார் என்பதை வெளியே தெரியப்படுத்த மாட்டோம். பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள்; அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துரையில் இல்லை. திரையுலகம் பற்றி அவதூறு பேசப்படுகிறது.

சில புகார்கள் வந்தது; அந்த விவகாரம் வெளியே தெரியகூடாது என்பதற்காக அதனை வெளியே சொல்லவில்லை. எங்கு இருந்தாலும் நம் உறுப்பினர்களுக்கு பாலியல் பிரச்னை நடந்தால் தைரியமாக இருங்கள்; புகாரளிக்க முன்வாருங்கள். திரைத்துறையில் பாலியல் புகார்களை அளிக்க பிரத்யேக எண் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version