கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்; கண்ணீரை துடைத்த குரல் இதே நாளில்தான் பாடுவதை நிறுத்திக்கொண்டது.
பி.பி.ஸ்ரீனிவாசின் குரல் வித்தியாசமான குரல். மழையில் நனைந்து வரும் காற்றாக சில்லிட்டு பரவும் தேன் குரல். மனதின் சந்து பொந்துகளை சலவை செய்யும் குரல்.
அதில் காதலின் லயமும் இருக்கும்; சோகத்தின் சுகமும் இருக்கும்.
‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’, ‘மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்’ என்று அவர் காதலை பாடும் போது அதில் கண்ணியம் இருக்கும்.
‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’, ‘கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்’ என்று அவர் சோகத்தை பாடும் போது கண்ணுக்கு தெரியாத கண்ணீர் இருக்கும்.
தாய் மொழி வேறாக இருந்தாலும் தமிழை தமிழாக உச்சரித்தவர் அவர்
