Home உலகம் “அபாயத்தின் ஆரம்பம்”- சிறப்பு கட்டுரை!

“அபாயத்தின் ஆரம்பம்”- சிறப்பு கட்டுரை!

அபாயத்தின் ஆரம்பம்!

மு.பழனிவாசன்

கள்ளக்காதல், கஞ்சா, காவலர்கள், அரசு அதிகாரிகள் லஞ்சம், பல்வேறு காரணங்களை மையமாகக் கொண்டு கொலைகள், தற்கொலைகள், கற்பழிப்புகள், ஊழல்கள், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பரிப்புகள், சினிமா அந்தரங்கங்கள், என்றெல்லாம் வாசித்து வாசித்து அலுத்துப்போய்விட்டது. அறம் சார்ந்து, மொழி சார்ந்து, மானிடத்தின் உளவியலை ஆரோக்கியமாக மேம்படுத்தும் செய்திகள் எதுவும் அவ்வளவாக வெளிவருவதில்லை. ஒட்டுமொத்த ஊடகங்களும் “வைரல், ட்ரெண்ட்” என்கிற கோட்பாட்டிற்குள் முடங்கிவிட்டன. பாரதியாரின் ஆன்மாவே மீண்டும் அவதாரமெடுத்து வந்தால் கூட, இன்றைய ”முன்களப்பணியாளர்கள்” அவரை பந்தாடி ஓட ஓட விரட்டிவிடுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. சரி.. விஷயத்திற்கு வருகிறேன்.

வழக்கம்போல் இன்று நாளிதழைப் புரட்டியபோது, பெட்டிச்செய்தியாக வாசிக்க நேர்ந்த ஒரு செய்தி என்னை கிறுகிறுக்க வைத்தது. நாம் அடிக்கடி நேட்டோ அமைப்பு, நேட்டோ நாடுகள், நேட்டோ படை என்றெல்லாம் ஓரளவு கேள்விப்பட்டிருப்போம். (ரீல்ஸ் மோகத்திலும், யூட்யூப் பார்த்து வைத்தியம், பிரசவம், தற்கொலை, கொலை ஆகியன செய்யும் பலருக்கும், அதாவது ஓரளவிற்காவது படித்தவர்களுக்கே தெரியவில்லை. அப்படியே பொதுநல நோக்கில் ஏதாவது புரியவைக்கலாம் என்றால், “பூமர் அங்கிள்” என்றழைக்கப்படுவோம். எச்சரிக்கை!)    

நேட்டோ என்பது ஐரோப்பாவிலும் வட அட்லாண்டிக் பகுதியிலும் உள்ள நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, கூட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படும் ஒரு முக்கிய சர்வதேச பாதுகாப்பு அமைப்பு. அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நெருக்கடி மேலாண்மை, பயங்கரவாதம் மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள். மேலும், இந்த அமைப்பில் உள்ள அந்தந்த உறுப்பு நாடுகளின் சொந்த படைபலத்தின் ஒருபகுதியை உலக அமைதிக்காகவும், உறுப்புநாடுகளுக்கு பெருவாரியான அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை காக்கும்பொருட்டும், மீட்பு உதவிகளுக்காகவும் கூட பயன்படுத்துகின்றன.

            யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை. இப்போது அதற்கும் ஆப்பு தயாராகிறது. ஆம். நேட்டோ நாடுகளின் அமைப்பில் அமெரிக்கா, ஐரோப்பாவின் டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உறுப்பினராக உள்ளன. வெனிசுலாவை கைப்பற்றிய பிறகு அமெரிக்க அதிபரின் பார்வை க்ரீன்லாந்து மீது பதிந்துள்ளது. அது டென்மார்க்கின் ராஜ்ஜியத்தில் உள்ளதால், டென்மார்க் மட்டுமல்ல. நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்துமே அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் நிலைக்குப் போய்விட்டன. ஏன்? நேட்டோ என்பது ஒரு வேலி போன்றது. இப்போது அந்த வேலிக்குள் இருக்கும் நாடுகளையே அமெரிக்கா அபகரிக்கும் முயற்சியை, வேலியே பயிரை மேய்வது போன்றதே தவிர வேறில்லை.

அவையெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது அடுத்து சுடச்சுட ஒரு செய்தி. அதாவது பாகிஸ்தான் ஏற்கனவே சில ஒப்பந்தங்களை சவுதியுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் தற்போது பிற இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றிணைத்து, இஸ்லாமிய நாடுகளுக்கான ”இஸ்லாமிய நேட்டோ நாடுகள்” என்கிற அமைப்பை உருவாக்க முனைவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த அமைப்பில் துருக்கி நாட்டையும் இணைக்க  பேச்சு வார்த்தை நடக்கிறதாம்! அது அவர்கள் பாடு.. நாம் ஏன் இங்கே அலட்டிக்கொள்ள வேண்டும்? என்று கேட்டால், அது தவறாகும். என்?

அப்படி இஸ்லாமிய நாடுகள் ஒரு அமைப்பை உருவாக்கினால், இது வரை இருந்துவரும் பொருளாதார ரீதியிலான வல்லரசுகள் என்னும் நிலைமாறி, மதங்களின் ரீதியில் இந்த உலகம் அணிவகுக்க வேண்டியிருக்கும். உலகின் பெரும்பான்மை மதங்களாக இருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம் தங்களுக்கு என அமைப்பை உருவாக்கினால், அதுவும் நடைமுறைக்கு வந்துவிட்டால், அது அந்தந்த பிராந்தியங்களின் அமைதியைக் குலைக்கும். இந்த உலகம் ஏற்கனவே அரேபிய படையெடுப்புகள், சிலுவை போர்கள் என மோதிக்கொண்ட வரலாறு இருக்கின்றது. அவற்றையெல்லாம் கடந்து, இந்த உலகம் முறைப்படியான ஜனநாயகம், உலகளாவிய பொருளாதாரம் என்கிற அளவில் இயங்கி வருகின்றது. பல்வேறு கசப்புகள், முரண்பாடுகள் இருக்கின்றபோதும், கடவுளின் புண்ணியத்தில் ஏதோ வண்டி ஓடுகிறது.

நம் இந்திய தேசமானது வெறும் பொருளாதாரத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளாமல் புண்ணியம் மிகுந்த தனித்துவமான கலாச்சாரம் கொண்ட தேசமாக, “வசுதேவ குடும்பம்” என்கிற கோட்பாட்டில் நடைபோடுகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதையே தன் தொழிலாகவும், தன் நாட்டு மக்களின் சுபிட்சமான வாழ்விற்காகவும் தான் தோன்றிய காலத்திலிருந்து துரும்பைக்கூட கிள்ளிப்போடாத பாகிஸ்தான் முன்னெடுக்கும்”இஸ்லாம் நாடுகளின் நேட்டோ” திட்டமானது நிச்சயம் உலகின் அழிவிற்கானது என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. ”சும்மாவே ஆடுபவன் தன் காலில் சலங்கையும் கட்டிக்கொண்டால்?” அது எத்தகைய ஆட்டமாக இருக்கக்கூடும் என்பது சொல்லாமலே குழந்தைக்குக் கூடபுரியும்.  இது மனம் கொண்ட மனிதர்களின் கூட்டு அமைப்பாக இருக்கப்போவதில்லை. நிச்சயம்”மதம்” கொண்டவர்களின் கூடாமாக மாறிவிடும். மதங்களின் ரீதியில் நாடு பிடிக்கும் நோக்கத்தை செயல்படுத்த இது ஒரு காரணியாக அமையும். ஆகவே, இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதாகும்.

பாகிஸ்தானின் இத்தகைய முன்னெடுப்பிற்கு காரணங்கள் பலவற்றைக் காட்டினாலும், அவையெல்லாம் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்காது. அதன் வரலாறு அப்படி! சாத்தான் ஓதும் வேதம் போன்றதே! இது உலகளாவிய பொருளாதாரத்தை சிதைக்கலாம். நேசக்கரங்கள் விலக்கிக்கொள்ளப்படலாம். உலகில் தேசங்களைத்தாண்டிய நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய முடியாமல் போகலாம். ஆதரவற்றவர்கள் அதிகமாவர். சர்வதேச இது அபாயத்தின் ஆரம்பமின்றி வேறில்லை. உலகநாடுகள் இடையே இரும்புத்திரைகள் எழும்பி, தொடர்புகளற்றுப் போகலாம். எப்பொழுதும் பீதியே நிலவக்கூடும்.

எந்த ஒரு அமைப்பும் தோன்றலாம். அது மனிதநேயத்தின் அடிப்படையில், நல்லிணக்கத்தை பேணும்வகையில், ஒருவருக்கொருவர் அனுசரணையாக விளங்கி மனிதகுலம் மட்டுமின்றி இந்த பூமியின் அனைத்து உயரினங்கள், வளங்கள் மற்றும் அமைதியைக் காக்கும் வகையில் உருவாக வேண்டும். பாகிஸ்தானின் இந்த முன்னெடுப்பு வெற்றி பெறுமா? இல்லையா? என்ற கேள்விகளுக்கும் முன், இத்தகைய எண்ணம் உருவாவதே தவறு என்பது என்னுடைய தீர்க்கமான கருத்து.

உலகம் இத்தகைய சூழலில் திணறிக்கொண்டிருக்கிறது. நாம் பொங்கல் பரிசு, இலவச பேருந்து, இலவச சோறு, சித்தாந்தத் தகராறு என சில்லறைகளை சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பது மிகப்பெரும் வேதனை! அடுத்த தலைமுறையாவது உருப்பட வேஎண்டுமென்றால் பள்ளிப் பாடத்திட்டங்களில் மாற்றம் தேவை. மீண்டும் சந்திப்போம்.

மு.பழனிவாசன்

Exit mobile version