பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பர்வத மலை மீது பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நாளுக்கு நாள் பர்வத மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி என கடுமையான பாதைகளை கடந்து தான் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலை மீது ஏற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
மற்ற நேரங்களில் மலையேறும் பாதை மூடப்பட உள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பருவதமலை ஏறுவதற்குத் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை, கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
புதுப் பாளையம் வனச்சரகம் சார்பில் சூழல் கட்டணம் என்ற பெயரில் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கட்டணம் கிடையாது.
மேலும் பருவத மலையைச் சுற்றி உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி, பட்டியந்தல், வீரளூர், சீனந்தல், கெங்கலமகாதேவி, நல்லான் பிள்ளைபெற்றாள், அருணகிரி மங்கலம், கோயில் மாதிமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் வசிப் பவர்களுக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

