Home செய்திகள் 40 நாட்களாக முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

40 நாட்களாக முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 40 நாட்களாகியும் முறைப்படி முடித்து வைக்கப்படாமல் (Prorogued) நீடிப்பது, இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதிய சாதனையாகவும் பெரும் அரசியல் ஊகங்களை எழுப்பும் காரணியாகவும் மாறியுள்ளது.

வழக்கமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட 3 முதல் 4 நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் முறைப்படியான முடித்துவைப்பு அறிவிப்பை வெளியிடும் நிலையில், தற்போது 40 நாட்கள் கடந்தும் அறிவிப்பு வெளியாகாததால், புதிய அமர்வைக் கூட்டாமலேயே நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் 2015-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி மசோதா குறித்த ஆலோசனைகளின் போது 28 நாட்கள் கழித்து முடித்துவைக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதனை முறியடித்துள்ளதாக மக்களவை முன்னாள் தலைமைச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி தெரிவித்துள்ளார். குறிப்பாக, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையிலான திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரங்களை இக்கூட்டத்தொடரின் நீட்சி மூலமாகவே கொண்டுவர அரசு வியூகம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் என்ற எதிர்ப்பை சமாளிக்க, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை அதிகரிக்கும் யோசனையும் அரசின் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Exit mobile version