Home செய்திகள் செப். 28–30 வங்கி வேலைநிறுத்தம்: 5 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படுமா? பாதுகாப்பை உறுதி செய்ய...

செப். 28–30 வங்கி வேலைநிறுத்தம்: 5 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படுமா? பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலங்களுக்கு உத்தரவு!

UFBU’s three-day strike is scheduled for September 28–30, with the unions pressing for a five-day banking week and other demands. The government has sought security arrangements for critical banking infrastructure, including ATMs, currency chests, cheque-clearing centres and data centres.

வாரம் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) சார்பில் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய நிதிச் சேவைகள் துறையின் கோரிக்கையை ஏற்று அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், கரன்சி செஸ்ட்கள் (நாணய பெட்டகம்), காசோலை பரிவர்த்தனை மையங்கள், தரவு மையங்கள், இணையவழி பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் ஏடிஎம்கள் உள்ளிட்ட வங்கியின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்குத் திரும்பும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மாநில அளவிலான உளவுத்துறை அறிக்கைகளை மத்திய அரசுடன் பகிர்ந்துகொள்ளுமாறும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 26, 27 ஆகிய வார இறுதி விடுமுறை நாட்களைத் தொடர்ந்து இந்த 3 நாள் வேலைநிறுத்தம் தொடர்வதாலும், செப்டம்பர் 30-ஆம் தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதாலும் 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதால், பொதுமக்கள் அத்தியாவசிய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version