மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, மின்நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று புதுச்சேரி மின்துறை அறிவித்து உள்ளது. புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் உத்தேச மின் கட்டணம் அறிவிக்கப்படும்.
தொடர்ந்து ஒழுங்கு முறை ஆணையர் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு மின் கட்டணம் ஏப்ரல் மாதம் உயர்த்தப்படும். இதே போல் நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுவை அரசின் மின்துறை கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளது.
அதன்படி 2023-24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களுக்கான மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

