ஒரு பெண் குழந்தை படித்துவிட்டால் அது அவளுக்கு மட்டுமின்றி, அவள் குடும்பத்திற்கே நல்லது. இன்னும் சொல்லப் போனால் அடுத்து வரக்கூடிய ஒருதலைமுறைக்கே நல்லது என்பார்கள்.
கல்வி ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு பொருளாதாரப் பாதுகாப்பு தருகிறது. அவளுடைய நல்லறிவு ஒட்டுமொத்த தேசத்திற்கே ஒளியூட்டுகிறது என்பது உண்மை.
பாரத பண்பாட்டில் பெண்களின் மானத்திற்கும் கெளரவத்திற்கும் மிகப்பெரிய போற்றுதல் செய்யப்படுகிறது. தனிவாழ்வில், குடும்ப வாழ்வில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் அறியாமையால் சமூகம் போட்டிருந்த பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறியது பெண்ணினம்.
இத்தகைய பெண்ணினம் குறிப்பாக தமிழகத்தின் பெண்ணினம் பற்றி வெளிவரும் தாறுமறான, கேவலமான செய்திகளால் ”கலங்கரை விளக்கமாக” விளங்க வேண்டியவர்கள் கலங்கிய குட்டையாக மாறியிருப்பது வெட்கக்கேடு.
சிலதினங்களுக்கும் முன்னர் ஒரு ஊரில் இரு பள்ளி மாணவிகளுக்குள் ‘எந்த பள்ளி மாணவிகள் அதிக கெத்து?”என சமூக வலைதளக்குழுவில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் நடுரோட்டில் வெடித்துள்ளது. சாலையில் போவோர்,
வருவோரெல்லாம் தடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த மாணவிகள் இன்னும் ஒருபடி மேலே போய் தங்களின் முக அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தைக் கர்சீப்பால் மூடிக்கட்டிக்கொண்டு களேபரம் செய்திருக்கிறார்கள்! (அந்த இரண்டு பள்ளி நிர்வாகமும் மாணவிகளின் எதிர்காலம்(!?) கருதி எச்சரித்தார்களாம். நியாயமாக மகளிர் காப்பகத்தில் 15 நாள் ரிமாண்டில் வைத்திருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.)
இன்று காலையில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். சென்னையில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் அவனுடைய காதலி +2 மாணவி ஆகிய இருவரும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தாங்கள் காதலிப்பதாகவும், எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என கேட்டிருக்கிறார்கள்!
நாளிதழ் செய்திகளில் தாயைக்கொல்ல முயற்சித்த மகள்!
காதலைத் தட்டிக்கேட்டதால் தந்தையின் தலையில் கல்லைத்தூக்கிப் போட்டு கொலை செய்த மகள்!
மதுபோதையில் இளம்பெண் நடுரோட்டில் கலாட்டா!
சர்வசாதாரணமாக ரோட்டோரத்தில் உள்ள பெட்டிக்கடையில் பைக்கில் சாய்ந்து கொண்டு வளைய வளையமாக புகைப்பிடிக்கும் நவ நாகரீக கண்மணி!
கூச்சப்படும் தன் காதலனை பொது இடம் என்றுகூட பயமின்றி இறுக்கி அணைத்துக் கொள்ளும் காதலி! கூடவே முத்தமழையும்!
தன் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய இளம்பெண்! திருமணமாகி, முதலிரவு சென்ற இடத்தில் கூலிப்படையை ஏவி கணவனின் கதையை முடித்த மனைவி!
தன் சுகபோகத்திற்காக தான் பெற்ற குழந்தையையே கிணற்றில் வீசி கொலை செய்த இளம்பெண்!
10 க்கும் மேற்பட்ட இளைஞர்களை திருமணம் செய்து, மோசடி செய்த “கல்யாண ராணி!”
பணத்திற்காக தாங்களே மனமுவந்து நேரடி ஒளிபரப்பில் கணவன் மனைவி உடலுறவுக்காட்சி!
அற்ப லைக்ஸ்ஸிற்காகவும், வருமானத்திற்காகவும் தங்கள் உடலழகை சமூக வலைதளத்தில் வெளியிடும் பெண்கள். அதை படமாக்குவது அவள் கணவனோ அல்லது உடன்பிறப்புகள்! திரைப்பட நடிகைகளே வெளிபடுத்த முடியாமல் தவிக்கும் காமரசத்தினை தங்கள் முகபாவத்திலும், உடல் கவர்ச்சியிலும் பேரல் பேரலாக ஊற்றக்கூடிய வல்லமை பொருந்திய மங்கைகள்!
சொத்து தகராறில் சொந்த தம்பியையே தீர்த்துக்கட்டிய சகோதரி!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய பலே பெண் அதிகாரி!
போலிப் ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்தினை தன்வசம் ஆக்கிய அம்மணி!
இப்படி எண்ணற்ற செய்திகள் போற்றுதலுக்குரிய பெண்ணினத்தைப் பற்றி வந்தவண்ணம் உள்ளன. இவையெல்லாம் எதனால் விளைகின்றன?
வெறும் மனம் சார்ந்த நோயினாலா இவை நிகழ்கின்றன? அது ஒரு சிறு சதவீதமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் ‘Easy money.. Easy life” என்கிற கோட்பாடு! எதற்காகவும், யாருக்காகவும், ஒருபோதும் தன் சொந்த அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காத மனோபாவம்! வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மடமைத் தனம்! யாரிடத்திலும் மரியாதையோ, அன்பையோ வெளிக்காட்டாத ஆணவத்தன்மை! இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்… மேலும் நம் நாடு, நம்நாட்டின் பெருமைக்குரிய கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமையாகிப்போனதால்!
எது பண்பாடு? எது அடிமைத்தனம்? எது புரட்சி? எது பெண் விடுதலை? என்பதெல்லாம் குறித்த புரிதல் இல்லாமை. சொந்த அறிவை பகுத்து அறிந்து கொள்ளமுடியாத பெண்களே இன்று தாங்கள் பகுத்தறிவின் உச்சத்தில் இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.
சமூக வலைதளத்தில் ஒரு இளம்பெண் தன் முகத்தை மறைக்காமல் வெளிப்படையாக “எனக்கு கட்டுப்பாடு பிடிக்காது. மூட நம்பிக்கை அறவே கிடையாது. நான் காலையில் 11 மணிக்கும் மேல்தான் எழுவேன். மாதவிலக்கு நாட்களின்போது குளிக்காமலேயே இருப்பேன். உறவில் கூட ஈடுபடுவோம். இதனால் பல நண்பர், நண்பிகளின் வரவு என் வீட்டில் எப்போதும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறோம்!” என்று கூறுகிறாள். இதைவிட மோசமான செய்தி வேறென்ன இருக்க முடியும்?
பெண்மைக்குரிய நல்லொழுக்கம், தியாகமனப்பான்மை, அன்பறம் என எதுவுமே இல்லாமல் இந்த சமூகம் வாழப் பழகிக்கொண்டதாகவே நான் கருதுகிறேன்.
டீக்கடைகளில் இன்னொருவர் பயன்படுத்திய கண்ணாடி கிளாஸ் என்னதான் சுடுநீரில் கழுவப்பட்டபோதும் அது எச்சில் பாத்திரமே என்று, அட்டையில் செய்யப்பட்ட டீ கப்பில் குடித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டுப் போகும் கலாச்சாரம் பெருகிவிட்டது. இதேபோல் ஆணும் பெண்ணுக்குமான ”உடலுறவு கோட்பாடு” மாறிக்கொண்டிருப்பதாகவே என்ண வேண்டியுள்ளது.
பெண்களின் கற்பைப்பற்றி அதாவது ”ஒருவனுக்கு ஒருத்தி” என்பதை பேசினால், அந்த “கற்புநிலை” வெறுமனே கற்பிக்கப்பட்டது என்கிறார்கள். தாயின் கருவறையைப் புனிதமாக கருதி போற்றாதவர்கள், பெண்களின் கருப்பையை வெறும் காமத்திற்கான வடிகாலாக கருதுபவர்களே கோயில் கருவறைக்குள் நுழைய போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு தர பலரும் கூடிவிடுகிறார்கள்.
சமூகம் நேர்த்தியாக வாழ, “கற்புநிலையென சொல்ல வந்தார்! இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்!”என்றான் பாரதி!
இங்கே இருகட்சி என்பது ஆண் என்பவன் ஒரு கட்சி. பெண் என்பவள் ஒரு கட்சி. பெண்ணுக்கு கற்பு எந்தளவு முக்கியமானதோ அதே அளவிற்கு ஆஉக்கும் அவசியம் என்பது பாரதி காலத்து சிந்தனை. ஆனால் இன்றோ அது தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறதோ என அஞ்ச வேண்டியுள்ளது.
வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பர். ஆண்குழந்தையோ பெண்குழந்தையோ பால்ய வயதிலேயே நல்லறத்தின்படி வளர்க்கப்பட வேண்டும். இல்லையேல் தேசத்தின் எதிர்காலமே மோசமாகும்.
இப்படியெல்லாம் பெண்ணினத்தின் ஒருபக்கம் கடும் விமர்சனத்திற்கு ஆட்பட்டிருக்கும் இதே சமயத்தில் மறுபக்கம், நிலவில் தரையிறங்கிய சந்திராயன் திட்டப்பணியில் வெற்றிகரமாக செயல்பட்ட இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள்!
காஷ்மீரில் உலகின் உயரமான இடத்தில் கட்டப்பட்ட பாலத்திற்காக தன் 15 வருட உழைப்பைக்கொட்டி சாதித்துக்காட்டிய பெண் பொறியாளர்!
தீவிரவாதிகள் தேசத்தை தாக்கியதும் பதிலடிகொடுக்க பறந்துசென்று துல்லியத்தாகுதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் திரும்பிய “ஆபரேஷன் சிந்தூர்” சார்ந்த பெண் இராணுவ வீராங்கனைகள்!
கட்டிய கணவன் கைவிட்டபோதோ, அல்லது இறந்து போய் விட்டாலோ கலங்கி கரைந்து போய்விடாமல் இளநீர் வியாபாரம், இட்லி வியாபாரம் முதல் பெரும் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டே தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் வல்லமை மிகுந்த பெண்கள் என பெண்ணியத்திற்குப் பெருமை சேர்க்கும் பெண்கள் இன்றும்கூட இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால் இந்த எண்ணிக்கை பெருமளவு சரிகிறதோ என்கிற ஐயப்பாடு மேலோங்குகிறது.
சமூக செயற்பாட்டாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் பென்ணியப் போராளிகள், அரசியல் கட்சிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் மட்டுமின்றி புதிதாக திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதியும் இது குறித்து அக்கறைகொண்டு சமூகநலனைப்பேணுதல் அவசியம்.
இப்போது கட்டுரையின் முதல்வரிக்கு வருவோம்.
”ஒரு பெண் குழந்தை படித்துவிட்டால் அது அவளுக்கு மட்டுமின்றி, அவள் குடும்பத்திற்கே நல்லது. இன்னும் சொல்லப் போனால் அடுத்து வரக்கூடிய ஒருதலைமுறைக்கே நல்லது என்பார்கள்.”
இதேபோல் ஒரு பெண்ணிடம் ஒழுக்கக்கேடு மிகுந்தவளாக மாறி விட்டால், அவள் குடும்பத்திற்கு நல்லதில்லை. இன்னும் சொல்லப் போனால் அடுத்து வரக்கூடிய ஒருதலைமுறைக்கே நல்லது இல்லை” என்றுதானே சொல்ல வேண்டும்?
இதை எழுதியதால் என்னை பழமைவாதி என்றோ, பெண்ணியத்திற்கு எதிரானவன் என்றோ கூறினால் அதற்காக கலங்கப் போவதில்லை. சமூக அக்கறையாளனாக என் கடமையைச் செய்கிறேன் என்கிற ஆத்ம திருப்தி எனக்கு உள்ளது. இப்படியே போனால் “பூனைக்கு யார்தான் மணி கட்டுவது?”
பொறுப்பற்ற பெண்ணியப்போரளிகளே.. சற்று மனம் திருந்துங்கள்.
இறுதியாக ஒரு நடிகர் பார்த்திபன், ரோஜா, தேவயானி ஆகியோர் நடித்த “புதுமைப்பித்தன்” திரைப்படத்தில் ஒரு காட்சி. பார்த்திபன் ரோஜாவைப்பார்த்து பேசும் வசனம்:
பெண்களின் அடிவயிறு புனிதமாக இருக்கும்வரை அதன் பெயர் ”கருவறை”. ஆனா.. இப்படி வாடகைக்கு விட்டா அதுக்குப்பேரு “கழிப்பறை”.
மு.பழனிவாசன்
