Thursday, March 26, 2026
Homeசெய்திகள்"பேரனால் பெற்ற பெருமை"- சிறப்பு கட்டுரை!

“பேரனால் பெற்ற பெருமை”- சிறப்பு கட்டுரை!

பேரனால் பெற்ற பெருமை

 மு.பழனிவாசன்

இன்று யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சென்சார் போர்டின் தலையீடுகள் அறவே இல்லாமல் தெருக்கள், முக்கிய சாலைகள், கோயில்கள், சுற்றுலாத்தலங்கள் என  ஆளாளுக்கு ரீல்ஸ் எடுத்து போடுகின்றனர். அவற்றில் கண்ணியமான, உருப்படியான சமாச்சாரங்களை பதிவேற்றுபவர்கள் வெகுசிலரே. அதற்காக அவர்கள் செய்யும் பொருட்செலவு, நேரச்செலவு போன்ற எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. இதெல்லாம் எதற்காக? புகழ் பைத்தியம் மற்றும் அவர்களின் ரீல்ஸ் வைரலாகி அதன்மூலம் வருமானம் வர வேண்டும் என்கிற ஏக்கமும்தான். அது சாத்தியமாகிறதா ? என்றால், ஒரு சிலருக்கே அது வாய்ப்பதாக தெரிகிறது. ஆனால் என்ன செய்வது? ஈஸி மணி, ஈஸி லைஃப் (Esay money; Easy Life) இதுமட்டுமே நோக்கமாக இருக்கிறது. ஆனால், அறிவியல் முன்னேற்றத்தில் வரப்பிரசாதமான சமூக வலைதள ஆதிக்கத்தை மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் இளையதலைமுறையும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்று அறிய வரும்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. அவர்களில் ஒருவர்தான் சேலம் மாவட்டம் காக்கபாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ப்ரவீன்.

அவர் அப்படி என்ன சாதித்தார்?

ப்ரவீனின் குடும்பத்தினருக்கு பாரம்பரியமான நெசவுத்தொழில் செய்வதே அவர்களின் வயிற்றுப்பாட்டையும் வாழ்க்கையின் பிற தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது. உலகின் பல்வேறு நிலவரங்களால் அவர்களின் தொழில் சிலகாலத்திற்கும் முன்வரை சுனாமியில் சுருட்டப்பட்டுக்கொண்டிருந்து குறித்து நாட்டு நிலவரத்தை நன்கறிந்தோருக்குப் புரியும். நம்மால் சுட்டிக்காட்டப்படும் ப்ரவீன் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடைய தாத்தாவின் உயிர் மூச்சின் ஓசையும், அவர் கையாளும் நெசவுத் தறியின் ஓசையும் வேறு வேறல்ல என்பதை ப்ரவீன் உணர்ந்தே இருந்திருக்கிறார். ஒருநாள் தன் தாத்தாவின் நெசவுத்திறன், கலைநயம் மிளிர அவர் தயாரிக்கும் நுட்பம் ஆகியவை ப்ரவீனின் மூளைக்குள் பல்பு போல ஒளியால் மின்னுகிறது.

பிறகென்ன? தாத்தாவின் உழைப்பை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றுகிறார். அன்றைய தினமே அது சுமார் 20,000 நபர்களை சென்று சேர்கிறது. அது மட்டுமல்ல தங்களுக்கு நெய்து தருமாறு 100 ஆர்டர்களுக்கும்மேலே வந்திருக்கிறது. இங்குதான் அவர் தனது மூளை ஆற்றலை பிரயோகித்து, தன் தாத்தாவின் தலைமையில் வறிய நிலையில் வாடும் நெசவாளிகள் 15 பேர் கொண்ட குழுவை அமைத்து, நம்பிக்கை, தரம், நேர மேலாண்மை ஆகியவற்றை சரியான முறையில் நிர்வகித்து, இன்றைய காலகட்டத்திற்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களை விநியோகம் செய்து முடிக்கிறார்.

வெளிநாட்டு ஆர்டர்களும் வரிசை கட்டுகிறதாம். உள்ளூருக்குள்ளேயே முகவரியற்று இருந்த தன் 85 வயது தாத்தாவை உலகத்திற்கே தெரியும்படி காட்டியிருக்கிறார் ப்ரவீன். புதியதாக ஒரு விற்பனை ஷோரும்கூட திறக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாராம். ப்ரவீன் தன் சாதுர்யமான, உருப்படியான ஒரு முயற்சி இன்று பல குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்தின் மையமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.

இன்று பாரத தேசம் உலகின் 4 வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் சுதேசித்தொழில்களுக்கு உத்வேகம் கொடுத்து வருகிறது. ஏற்றுமதி இலகுவாக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையில் தொழில் முனைவோருக்கு எண்ணற்ற வாய்ப்புகளும், தேவைப்படும் வசதிகளும், வழி காட்டுதல்களும் கிட்டி வருகின்றன. இத்தகைய தருணத்தில் ப்ரவீனின் காலத்திற்கேற்ற முயற்சி போற்றத்தக்கது. “குலத்தொழில்” என்பதை கேவலப்படுத்தாமல், அதையே தன் வாழ்வின் ஆயுதமாக்கி களம் கண்டு வெற்றி காணும் ப்ரவீனை நாமும் வாழ்த்துவோம்.

நல்லனவற்றை தேடுபவன் அர்ஜுனன் போல் சாதிக்கிறான்.

கண்டவற்றையும் நம்பி நேரத்தை விரையம் செய்பவன் துரியோதன்ன் ஆகிறான்.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள்,”ஒருவன் தன்னால் முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உலகில் எங்கோ ஒருவன் அதையே செய்து முடித்திருப்பான்” என்றார். வாய்ப்பு கிட்டவில்லை என்று இருப்போர் மத்தியில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்பவனை உலகம் சாதனையாளன் நிலைக்கு அவனை உயர்த்திவிட தவறுவதில்லை.

வீதிக்கு ஒரு ப்ரவீன் உருவாக பாரத அன்னையை வேண்டுவோம்.

 மு.பழனிவாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments