Home Uncategorized பிச்சை முதல் பத்மஸ்ரீ வரை!

பிச்சை முதல் பத்மஸ்ரீ வரை!

    1896 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி அன்று,  பிளவுபடுத்தப்படாத அன்றைய வங்காள மாநிலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய், தகப்பன், ஒரு சகோதரியுடன் பிறந்த குழந்தையையும் சேர்த்து நான்கு பேர் கொண்ட குடும்பம். அந்த குடும்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வறுமை வாட்டியது.

பிச்சை எடுத்து வாழத் தொடங்கினர். விதி விரட்டியது. அந்த குடும்பத்தை நோய் தாக்குகிறது.  அந்த சிறுவன் 6 வயதாக இருக்கும்போது, அவனைத்  தவிர மற்ற மூவரும் இறந்து விடுகின்றனர். அந்த சிறுவன் ஆதரவற்ற அனாதையாகிறன். அவன் பெயர் சிவானந்தா. 

     வங்கத்திலிருந்து பயணப்பட்டு பாரதத்தின் புண்ணியத்தலங்களில் ஒன்றான காசி மாநகருக்கு சிவானந்தா வந்து சேர்கிறான். எந்த சூழலிலும் வாய்மை, நேர்மை,  நல்லொழுக்கம் ஆகியவற்றிலிருந்து அவன் ஒருபோதும் விலகியதில்லை. அவனது நற்பண்புகள் யோகக்கலையில் வல்லவரான சுவாமி ஓம்காரனந்தாவிடம் கொண்டு சேர்த்தது. பாரத தேசத்தின் பெருமையான சனாதன தர்மத்தினை  சிறுவன் சிவானந்தா தீவிரமாக பின்பற்றினான்.  அவரிடம் யோகா, தியானம் கற்றபடியே காசி மாநகரின் கங்கைக்கரையில் ஆதரவற்று வாழ்ந்தவர்களுக்கு உற்றதுணையாக விளங்கினார். 

     தன் பிஞ்சு வயதில் வறுமையின் உச்சத்தைத் தொட்டதனால் அது தந்த வேதனையை நன்குணர்ந்த சிவானந்தா, “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாருக்கு நிகராக பிசிப்பிணியால் வாடியோருக்கு உணவளிப்பதை ஒரு இயக்கமாக மாற்றினார். பாரபட்சமில்லாமல் யோகம், தியானம் ஆகியற்றை பயிற்றுவித்து அவர்கள் சமூகத்தில் மேன்மையடைய உதவினார். 

    சமூகத்தால் அருவெறுப்பாக கருதப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு பிச்சைக்காரர்களாக வாழ்வில் போராடிய 600 க்கும் மேற்பட்ட  தொழுநோயாளிகளின் பசியைப் போக்கியதுடன், அவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினார். 

     அதிகாலை 3 மணிக்கே எழுந்து, யோகம், தியானம், மதச்சடங்கு போன்றவற்றை இடைவிடாமல் செய்தல்,  அதன்பின் சமூகத்தொண்டு ஆகியவற்றை மேற்கொண்ட சுவாமி சிவானந்தா  ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்கினார். அகில இந்திய அளவில் பல்வேறு மருத்துவ நிபுணர்களால் அவர் உடல் ஆரோக்கிய ரகசியம் குறித்து ஆய்வு செய்து ஆச்சரியப்பட்டனர். அவரது உணவு அரிசி உணவு, தானிய வகைகள் மட்டுமே. தரையில் பாய் விரித்து, தலைக்கு மனைப் பலகை வைத்து படுப்பதுதான் அவர் வழக்கம். 
   உலகமே கோவிட் நோயால் வீழ்ந்து கொண்டிருந்தபோது, தானும் முன்னுதாரணமாக இருந்து பாரதத்தின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். 

     சுவாமி சிவானந்தா அவர்களின் உயரிய சேவைகளுக்காக  கடந்த 2022 ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் “பத்ம ஸ்ரீ” வழங்கி கெளரவித்தார். விருது வழங்கப்பட்ட அரங்கத்தில் சுவாமி சிவானந்தா அவர்கள் கம்பீரமாக நடந்துவந்து வந்து பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களையும், ஜனாதிபதி அவர்களையும் வணங்கி விருது பெற்றதை உலகமே ஆனந்தமாய் கண்டு களித்தது. 

special

      பிச்சைக்காரராகப் பிறந்து, பாரத தேசத்தின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றதுவரை அவர் தனிமனித ஒழுக்கத்திலிருந்து விலகியதில்லை. தன் சேவையை கைவிட்டதில்லை. வெற்று விளம்பரத்திற்காக செயல்பட்டதில்லை. இப்படி எத்தனையோ “இல்லை”களைக் கொண்டிருந்தபோதும் தேசத்தின் மீதான பற்று, சனாதன வாழ்வியலில் தீவிர நம்பிக்கை ஆகியன அவரிடம் வளமாக இருந்தன. 

    2025 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி தன்னுடைய 129 ஆவது வயதில்  தான் வசித்த வாரணாசியிலேயே இறைவனின் திருநிழலில் ஐக்கியமானார். 

     திரை நட்சத்திரங்களின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்பவர்கள், ஆபாச ரீல்ஸ் வெளியிடுபவர்கள், காதல் மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து நாசமாபவர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளால் பள்ளிப்  பருவத்திலேயே பாழ்பட்டு போவோர் ஆகிய எவருக்கும் சுவாமி சிவானந்தா போன்றோரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம் பள்ளிப்பாடத்திட்டங்கள் அப்படி. அந்நிய தேசத்தின் கலாச்சார வாழ்வியலை கண்மூடித்தனமாகக் கொண்டாடும் தலைமுறைக்கு   சுவாமி சிவானந்தா போன்றோரின் வாழ்க்கை வரலாறு கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் பெருமையும், நம் கலாச்சாரத்தின் மேன்மையும் காப்பாற்றப்படும்.

                             மு.பழனிவாசன்

Exit mobile version