Home Uncategorized பிளாஸ்டிக் மனிதர்கள்!- சிறப்பு கட்டுரை!

பிளாஸ்டிக் மனிதர்கள்!- சிறப்பு கட்டுரை!

”நெகிழி” என அழைக்கப்படும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அரசாங்கங்கள் ஊக்குவிக்கின்றன. ஆனால் பிளாஸ்டிக்கே கூடாது என இனி யாரும் சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு தாமிரம், இரும்பு போன்ற உலோகங்கள் வரிசையில் மனிதகுல வாழ்வில் பின்னிப்பிணைந்துவிட்டது!

சமீபத்தில் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய ஆராய்ச்சியின் ஆரம்பகட்ட முடிவுகள் வெளிடப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் பச்சிளஞ்சிசுக்களின் நஞ்சுக்கொடியில் நுண்துகள்கள் வடிவில் பிளாஸ்டிக் இருப்பதைக்கண்டிருக்கிறார்கள். 
இது எப்படி சாத்தியமாகும்? 

தமிழ் பக்தி இலக்கியங்களில் “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்.. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்..”என்கிற கோட்பாடு உண்டு. அதாவது பஞ்சபூதங்கள், அவற்றின் தன்மைகள், மூலக் கூறுகள் அனைத்தும் மனித உடலில் உள்ளன என்பதே அந்த கோட் பாட்டின் உட்பொருள். அத்தகைய இயற்கையை தன் வசதிக்கேற்ப சூடாக்கி, சுத்திகரித்து சூட்சம நிலைகொண்டு கண்டுபிடித்து உற்பத்தி செய்யப்பட்டதே பிளாஸ்டிக்! இத்தகைய பிளாஸ்டிக்தான் இன்று சிசுக்களின் நஞ்சுக்கொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நஞ்சுக்கொடியிலேயே இருக்கிறதென்றால் உடலின் இரத்த ஓட்டத்தில் இல்லாமல் போகுமா? நிச்சயம் இருக்கிறது. 

மழைநீர் வடிகால் பாதையில் எங்காவது பிளாஸ்டிக் அடைத்துக் கொண்டால் நீரானது அந்த கால்வாய்க்குள் போவது தடைபடுகிறது. 

விளைமண்ணில் புதைந்துவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில்லை. மேலும் மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது. இதனால் மண்ணின் தன்மை நாசமாகிறது.  

என்னதான் அழித்தாலும், மறு சுழற்சி செய்தாலும் இனி இந்த பூமியில் பிளாஸ்டிக் என்பதை அறவே ஒழிக்க முடியாது என்பது நிச்சயம். ஏனெனில் நவீன உலகின் அத்தியாவசியத்தேவைகள் பலவற்றிற்கும் ஆதாரமாக நிலைபெற்றிருப்பது பிளாஸ்டிக்கே!

பிளாஸ்டிக் மனிதர்களின் தோற்றம்:

”விதை ஒன்று போட்டு சுரை வேறாகவா முளைக்கும்?” என்று தமிழ்ப்பழமொழி ஒன்று உண்டு. அவ்வகையில் தாயின் கருவில் சிசு குடிகொண்டிருக்கும்போதே அதன் கர்ப்பிணித் தாயினுடைய எண்ணற்ற உணவுப்பழக்க வழக்கங்களால் அவள் உடலில் பிளாஸ்டிக் கலக்கிறது. அது அப்படியே அவள் கருவில் வசிக்கும் சிசுவின் இரத்தத்திலும் கலக்கிறது! இப்படித்தான் பிளாஸ்டிக் மனிதகுலம் தயாராகிறது! 

புறவாழ்க்கையில் அழிக்க முடியாத அசுரனாக விளங்கும் பிளாஸ்டிக்கானது உடம்பினுள் பரவுவதால் என்ன நடக்கும்? மனித உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்றிருப்பதை மருத்துவ உலகம் சொல்வதைக்கேட்டிருப்போம். அவற்றில் கெட்ட கொழுப்பானது பல்வேறு நோய்களுக்கு காரணி என்றாலும், மாரடைப்பிற்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. உடலில் தானாக உருவாகும் தீமை தரும் ஒருவகை கொழுப்பே மாரடைப்புக்கு காரணமென்றால், புற உலகில் அழிக்கமுடியாத பிளாஸ்டிக் இரத்தத்தில் கலந்து இதயத்தில் பாயும்பொழுது எத்தகைய விளைவைத்தரும்? மழைநீர் வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்ட கதைதான். இது மட்டும்தானா? வியர்வைத்துளிகள், சிறுநீர், மலம் போன்றவற்றிலும் எத்தகைய நிலையைத்தரும் என்பதை என்ணிப்பாருங்கள். 

தவிர்க்கும் வழிமுறை:

    பிள்ளைபேற்றிற்கான விசேஷ கருப்பையுடன் கடவுளால் படைக்கப்பட்ட பெண்கள் இன்றைய அதிநவீன நாகரீக வாழ்வில் அவர்கள் மது அருந்துவது, புகைப் பிடிப்பது, இதர லாகிரி வஸ்துகளை பயன்படுத்துவது போன்றவை சர்வ சாதாரணமாகி விட்டது. பெரிய மாநகரங்களில்தான் என்றில்லாமல் குக்கிராமங்களிலும் இப்பழக்கம் இரண்டறக் கலந்திருக்கிறது. (பெண்ணினமே இப்படி ஆகிவிட்டது என்று சொல்வதாக கொந்தளிக்கக்கூடாது. ஆனாலும் எதுவும் சொல்வதற்கில்லை.) 

மேற்படிச் சூழலில் நம் நாட்டு மண்ணிற்கே உரித்தான மரபுவழி சார்ந்த உணவுவகைகளை உட்கொள்ளாமல், அந்நிய மோகத்தால் நாசகார உணவுவகைகளை சிறுவயதிலேயே பெண்குழந்தைகள் சாப்பிட்டு வளர்கின்றனர். அப்போதே பிளாஸ்டிக் போன்ற நச்சுக்கள் உடலில் கலக்கின்றன. அதன்பின் அவர்கள் தங்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கத்தொடங்கியதும் அவர்கள் சாப்பிடத்தொடங்கும் உணவு வகைகளில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக சத்தான நம் மரபு சார்ந்த உணவுகளைச் சாப்பிடுதல், வெளியிடங்களில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிதல் ஆகியவற்றுடன் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டுமாம்! அதுபோல் இனி ரத்தம் ஆய்வு செய்யப்படும்போது அதில் பிளாஸ்டிக் எத்தனை சதவீதம் உள்ளது? என்று கண்டுபிடிக்க நேரலாம்!    

ஆகவே இனியாவது கர்ப்பிணிகளாக பொறுப்பேற்க இருக்கும் பெண்ணினம் ”என் விருப்பம்; என் உணவு”என பிடிவாதம் பிடித்து கண்டதையும் மென்றுவிழுங்கக்கூடாது. அப்படிச் செய்யாவிட்டால்  பெண்களின் கருவறையானது, குப்பைத் தொட்டியாக மாறுவதை தவிர்க்க முடியாது!

இதையெல்லாம் அம்மணிகள் கேட்பார்களா? மாட்டார்களா? என்பதுபற்றி எதுவும் தெரியாது. ஆனால் இப்படியே போனால் உடலில் பிளாஸ்டிக் பெருகிப்பெருகி, ஒருவர் இறந்தபின்  அதிகவெப்பம்தரும் மின்சார சுடுகாட்டின் இயந்திரங்களால்கூட எரிக்க முடியாத ”பிளாஸ்டிக் மனிதர்கள்” பல்கிப் பெருகிவிட வாய்ப்புகள் அதிகமாகும் என்பது நிச்சயம்!    

        
  – மு.பழனிவாசன்

Exit mobile version