ராமநாதபுரம் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் கரிகாலன். இவர் கடந்த திங்கட் கிழமை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தலைமை காவலர் கரிகாலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரிடம் தகராறு செய்தார். மேலும், முடிந்தால் தன்னை கைதுசெய்து பாருங்கள் என மிரட்டும் தொனியில் பேசினார். தலைமை காவலர் கரிகாலன் அந்த நபரை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தியபோதும், அவர் தொடர்ந்து சத்தம் போட்டு கொண்டிருந்தார்.
இதனை அருகில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலானது. இந்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் குறித்து டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அழகன்குளம் பகுதியை சேர்ந்த லெட்சுமணராஜ் என்பதும், அவர் நகராட்சி ஊழியர் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, லட்சுமணராஜ் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து, அவதுறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
