இயற்பியலின் பிதாமகராகப் போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன், நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்த மாமேதை ஆவார்.
ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அவர் தலையில் ஆப்பிள் விழுந்த அந்த எளிய நிகழ்வு, பிரபஞ்சத்தின் ரகசியமான புவி ஈர்ப்பு விசையை உலகிற்கு உணர்த்தியதுடன், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் சந்தேகமின்றி நிரூபிக்க உதவியது.

இவர் எழுதிய ‘பிலாசபியே நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேடிகா’ (Philosophiæ Naturalis Principia Mathematica) எனும் நூல், இன்றும் இயந்திரவியல் (Mechanics) துறையின் வேதமாகத் திகழ்கிறது. ஒளியியல் துறையிலும் முத்திரை பதித்த இவர், சூரிய ஒளியில் ஏழு வண்ணங்கள் கலந்திருப்பதை நிரூபித்துக் காட்டியதுடன், வானியலை ஆய்வு செய்யப் பயன்படுத்தத்தக்க நவீன தொலைநோக்கியையும் வடிவமைத்துத் தந்துள்ளார்.
அறிவியல் உலகின் இந்த துருவ நட்சத்திரம் மறைந்த தினத்தில், அவரது ஈடுஇணையற்ற கண்டுபிடிப்புகளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.